ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி; தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி..!!


ஆசிய பெண்கள் 5 பேர் ஆக்கி; தாய்லாந்தை வீழ்த்தி இந்திய அணி திரில் வெற்றி..!!
x

image courtesy; twitter/ @TheHockeyIndia

தினத்தந்தி 27 Aug 2023 11:32 AM GMT (Updated: 28 Aug 2023 11:57 AM GMT)

இந்த தொடரில் இந்திய அணி தாய்லாந்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சலாலா,

ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக்கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் நேரடியாக தகுதி பெறும். மற்ற 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி அடையும். உலகக்கோப்பை போட்டிக்கான ஆசிய மண்டல பெண்கள் 5 பேர் ஆக்கி தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்த போட்டிதொடரில் இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் மலேசியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு எதிராக மெகா வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில் இந்திய அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் இன்று தாய்லாந்து அணியுடன் மோதியது. இதில் ஆரம்பம் முதலே இரு அணியினரும் கோல் அடிப்பதில் ஆர்வம் காட்டினர். போட்டி தொடங்கிய முதல் நிமிடத்திலேயே இந்திய அணி 2 கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தாய்லாந்து அணியினர் விரைவாக கோல் அடித்து சமநிலைக்கு கொண்டு வந்தனர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற நிலையில் இருந்தன.

பின்னர் தொடங்கிய கடைசி நேர ஆட்டத்தில் தாய்லாந்து அணி முதலில் கோல் அடித்து 4-3 என முன்னிலை பெற்றது. பின் தனது வேகத்தை கூட்டிய இந்திய அணியினர் தீவிர முயற்சிக்கு பின் கோல் அடித்து சமநிலை பெற்றனர். இந்த ஆட்டம் டிராவை நோக்கி நகர்கிறது என அனைவரும் நினைத்தனர்.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக போட்டி முடிவடைய 1 நிமிடத்திற்கு முன் இந்திய வீராங்கனை அஜ்மினா குஜூர் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் நவ்ஜோத் கவுர், மஹிமா சவுத்ரி , அஜ்மினா குஜூர் தலா ஒரு கோலும் மோனிகா திபி 2 கோல்களும் அடித்தனர்.

இந்த தொடரில் இந்திய அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் அரையிறுதியில் மலேசிய அணியுடன் மோத உள்ளது.


Next Story