அகில இந்திய ஆக்கி: கர்நாடகா இறுதிப்போட்டிக்கு தகுதி


அகில இந்திய ஆக்கி: கர்நாடகா இறுதிப்போட்டிக்கு தகுதி
x

கர்நாடக அணி, ராணுவ அணிக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.

எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான 94-வது அகில இந்திய ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரெயில்வே அணியில் பிரதாப் லக்ரா (3-வது நிமிடம்), அனுராக் குஜூர் (10-வது நிமிடம்), அர்ஜூன் ஷர்மா (55-வது நிமிடம்) தலா ஒரு கோலடித்தனர். பஞ்சாப் நேஷனல் வங்கி தரப்பில் சஞ்சய் (17-வது நிமிடம்), குர்சிம்ரன் சிங் (59-வது நிமிடம்) தலா ஒரு கோல் திருப்பினர்.

இரண்டாவது அரைஇறுதியில் இந்திய ராணுவம்-கர்நாடகா அணிகள் சந்தித்தன, விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ராணுவ அணியில் ரஜாந்த் 9-வது நிமிடத்திலும், கர்நாடக அணியில் செல்சி மெடப்பா 22-வது நிமிடத்திலும் கோலடித்தனர். ஆட்டம் டிராவில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்ததால் சமநிலை நீடித்தது. இதைத்தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட'சடன்டெத்' முறையில் முதல் வாய்ப்பை இரு அணிகளும் கோலாக்கின. 2-வது வாய்ப்பை ராணுவ அணி கோட்டை விட்டது. கர்நாடக அணி கோலடித்து வெற்றியை தனதாக்கியது. பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் கர்நாடக அணி 5-4 என்ற கோல் கணக்கில் ராணுவத்துக்கு அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியன் ரெயில்வே-கர்நாடகா அணிகள் மோதுகின்றன.


Next Story