பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு - இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி


பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே இலக்கு - இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி
x

Image : Hockey India 

இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை ஜூலை 27-ந் தேதி எதிர்கொள்கிறது.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ந் தேதி தொடங்குகிறது. இதன் ஆக்கி போட்டி ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை அரங்கேறுகிறது. இதில் பங்கேற்கும் 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஆண்களுக்கான போட்டியில் இந்தியா 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை ஜூலை 27-ந் தேதி எதிர்கொள்கிறது.

பாரீஸ் ஒலிம்பிக் குறித்து இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் நேற்று கூறுகையில்,

'டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எங்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்க கூடிய ஒரு சிறப்பான தருணமாகும். அதில் நாங்கள் வெண்கலப்பதக்கம் வென்றோம். அந்த உத்வேகத்தை பாரீஸ் போட்டிக்கு கொண்டு செல்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த முறை எங்களது பதக்கத்தின் தரத்தை உயர்த்தி தங்கப்பதக்கம் வெல்வதே இலக்காகும்.

ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்துவோம். முதலில் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு கால்இறுதியை உறுதி செய்வதே எங்கள் திட்டமாகும். எங்களது அனுபவம் மற்றும் திறமையை பார்க்கையில் நிச்சயமாக பதக்க மேடையில் ஏறுவோம் என்று நம்புகிறோம்.

'பி' பிரிவில் இருக்கும் எல்லா அணிகளும் தங்களுக்குரிய நாளில் எந்தவொரு அணியையும் வீழ்த்தும் சக்தி படைத்தவையாகும். எனவே இந்த பிரிவு ஆட்டங்கள் சவால் நிறைந்ததாக இருக்கப் போகிறது.

ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தயாராக இருக்கிறோம். முழு திறமையையும் வெளிப்படுத்தினால் எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும்' என்றார்.


Next Story