உலக தடகள போட்டி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மீண்டும் தங்கம் வென்றார், வான் நீகெர்க்


உலக தடகள போட்டி 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மீண்டும் தங்கம் வென்றார், வான் நீகெர்க்
x
தினத்தந்தி 9 Aug 2017 11:30 PM GMT (Updated: 9 Aug 2017 8:47 PM GMT)

உலக தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தத்தில் தென்ஆப்பிரிக்க வீரர் வான் நீகெர்க் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார்.

லண்டன்,

அவருக்கு சவால் அளிக்கக்கூடிய போட்டியாளரான போட்ஸ்வானா நாட்டு வீரருக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

16–வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக சாதனையாளருமான தென்ஆப்பிரிக்க வீரர் வான் நீகெர்க் எளிதாக முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தக்க வைத்தார். அவர் பந்தய தூரத்தை 43.98 வினாடியில் கடந்தார். பகாமஸ் வீரர் ஸ்டீவன் கார்டினெர் 44.41 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், கத்தார் வீரர் அப்தாலே ஹாருன் 44.48 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

வான் நீகெர்க்கு சவால் அளிக்கக்கூடிய போட்டியாளரான போட்ஸ்வானா நாட்டை சேர்ந்த ஐசக் மக்வாலா தொற்று நோய் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் கடைசி நேரத்தில் தடைவிதித்தது. 48 மணி நேரம் தனது அறையில் தனியாக இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் அவரால் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் வான் நீகெர்க் எளிதாக பட்டம் வென்றார். ஐசக் மக்வாலாவுக்கு விதிக்கப்பட்ட தடை சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதற்கு தென்ஆப்பிரிக்க தடகள அணியின் டாக்டர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தடை குறித்து சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், ‘தனது கடின உழைப்பையும், திறமையையும் ஐசக் மக்வாலா இந்த போட்டியில் வெளிப்படுத்த வாய்ப்பு இல்லாமல் போனதற்கு சர்வதேச தடகள சம்மேளனம் மிகவும் வருந்துகிறது. எல்லா வீரர்களின் நலனையும் கருத்தில் கொண்டு நாங்கள் முடிவு எடுத்தோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கப்பதக்கம் வென்ற வான் நீகெர்க் கருத்து தெரிவிக்கையில், ‘மக்வாலா போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது மிகுந்த வேதனைக்குரிய வி‌ஷயமாகும். 200 மீட்டர் ஓட்டப்பந்தய தகுதி சுற்றுக்கு முன்பாக நான் அவரை பார்த்தேன். அப்போது அவரது தோளில் கைப்போட்டு விரைவில் நீ குணமடைவாய் என்று சொல்ல விரும்பினேன். உண்மையை சொல்லப்போனால் எனது பதக்கத்தை கூட அவருக்கு கொடுக்கலாம் என்று நினைக்கிறேன். ஆனால் விளையாட்டில் இது மாதிரி நடப்பது சகஜம்’ என்றார்.

பெண்களுக்கான ஈட்டி எறிதலில் செக் குடியரசு வீராங்கனை பார்போரா ஸ்பாட்கோவா 66.76 மீட்டர் தூரம் வீசி மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார். 2008 மற்றும் 2012–ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவரான பார்போரா ஸ்பாட்கோவா 2007–ம் ஆண்டு உலக போட்டியில் தங்கம் வென்று இருந்தார். 10 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தங்கப்பதக்கத்தை தனதாக்கி சாதித்து இருக்கிறார்.

வெற்றிக்கு பிறகு பார்போரா ஸ்பாட்கோவா அளித்த பேட்டியில், ‘இந்த ஸ்டேடியம் எனக்கு ராசியானதாகும். இங்கு யாரும் என்னை தோற்கடித்ததில்லை. லண்டன் காற்றில் எனக்கு ஏதோ அதிர்ஷ்டம் இருக்கிறது என்று கருதுகிறேன். அதனை விவரிக்க முடியாது. இந்த ஸ்டேடியத்தில் களம் புகுந்ததும் அமைதியாகவும், மிகவும் இயல்பாகவும் இருப்பதாக உணர்ந்தேன். இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்று நம்பினேன்’ என்று தெரிவித்தார்.

இன்று நடைபெறும் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் 19 வயதான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்கிறார். உலக தரவரிசையில் 14–வது இடத்தில் இருக்கும் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 86.48 மீட்டர் தூரம் வரை வீசி இருக்கிறார். அவர் மேலும் ஒரு மீட்டர் அதிகம் வீசினால் தான் பதக்க வாய்ப்பை பெற முடியும் என்று தெரிகிறது. வழக்கமாக ஏமாற்றம் அளித்து வரும் இந்திய வீரர்களுக்கு மாறாக அவரது செயல்பாடு இருக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.


Next Story