உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து


உலக பேட்மிண்டன் இறுதி சுற்று: இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 15 Dec 2018 11:00 PM GMT (Updated: 15 Dec 2018 8:08 PM GMT)

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி.சிந்து முன்னேறினார்.

குவாங்சோவ்,  

உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, 8-ம் நிலை வீராங்கனையான தாய்லாந்தின்ராட்சனோக் இன்டானோனை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-16, 25-23 என்ற நேர்செட்டில் ராட்சனோக் இன்டானோனை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 54 நிமிடம் தேவைப்பட்டது. இந்த போட்டியில் சிந்து தொடர்ந்து 2-வது ஆண்டாக இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறார். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சிந்து, முன்னாள் உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்கிறார். இருவரும் இதுவரை 12 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றனர். இதில் இருவரும் தலா 6-ல் வெற்றி கண்டுள்ளனர்.

வெற்றிக்கு பிறகு சிந்து அளித்த பேட்டியில், ‘பதற்றத்தில் சில எளிதான தவறுகளை செய்ததால், ராட்சனோக்கின் கை கொஞ்சம் ஓங்கியது. பிறகு பொறுமையாக செயல்பட்டு ஆட்டத்தை எனக்கு சாதகமாக மாற்றினேன். எனது ஆட்டத்தில் முன்பை விட நல்ல முன்னேற்றம் கண்டுள்ளேன். இந்த சீசனை தங்கப்பதக்கத்துடன் நிறைவு செய்ய முடியும் என்று நம்புகிறேன். கடந்த 4 ஆட்டங்களில் விளையாடியது போல் இறுதிப்போட்டியிலும் நன்றாக செயல்படுவேன்’ என்றார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 20-22, 17-21 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீரரான ஷி யுகியிடம் (சீனா) போராடி தோல்வி அடைந்தார்.


Next Story