துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Jan 2019 10:00 PM GMT (Updated: 19 Jan 2019 9:29 PM GMT)

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடரில், முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது.


* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களில் ஜஸ்பிரித் பும்ரா மிகவும் சிறப்பாகவும், திறனாகவும் யார்க்கர் பந்துகளை வீசி வருகிறார். மற்ற பந்து வீச்சாளர்களுடன் ஒப்பிடுகையில் பும்ரா பந்து வீச்சு வித்தியாசமாக இருக்கிறது. பந்தை ஸ்விங் செய்வதுடன் நல்ல வேகத்திலும் வீசுகிறார். முன்பு வாக்கர் யூனுஸ் செய்தது போல் பும்ரா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் யார்க்கர் பந்து வீசுகிறார். உலக கோப்பை போட்டியில் கடைசி கட்ட பந்து வீச்சில் பும்ரா நிச்சயம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று இருப்பது மிகப்பெரிய சாதனையாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

* ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரரான விகாஸ் கிருஷ்ணன் தனது முதலாவது தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க வீரர் ஸ்டீவன் ஆன்ட்ராடேவை சந்தித்தார். இந்த பந்தயம் நியூயார்க்கில் நேற்று நடந்தது. இதில் விகாஸ் கிருஷ்ணன் டெக்னிக்கல் நாக்-அவுட் முறையில் வெற்றி பெற்று தனது புதிய பயணத்தை வெற்றியுடன் தொடங்கினார்.

* ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘37 வயது ஆனாலும் டோனி ரன் எடுக்க ஓடும் வேகம் அபாரமானது. அவர் கிரிக்கெட் ஆட்டத்தின் சூப்பர் ஸ்டார். அவர் எப்பொழுதும் தலைசிறந்த வீரர் ஆவார். டோனி போன்ற சிறந்த வீரருக்கு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டால் வெற்றி பெற முடியாது. இந்தியாவுக்கு எதிரான தொடர் எங்கள் வீரர்களுக்கு நல்ல பாடமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

* இங்கிலாந்து லயன்ஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (பிப்ரவரி) இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்திய ‘ஏ’ அணியுடன் இரண்டு 4 நாள் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டிக்கான இந்திய ‘ஏ’ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் 3 ஒருநாள் போட்டி அணிக்கான இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடைசி 2 ஒருநாள் போட்டிக்கு அங்கித் பாவ்னே கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. ஹென்ரிக்ஸ் 45 ரன்னிலும், வான்டெர் துஸ்சென் 93 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 27-வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஹசிம் அம்லா 108 ரன்னுடனும், டேவிட் மில்லர் 16 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் அணி 25 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து இருந்தது.Next Story