கிரிக்கெட் தொடர்: இந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு எடுக்கப்போவதாக கிறிஸ் கெய்ல் அறிவிப்பு


கிரிக்கெட் தொடர்: இந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு எடுக்கப்போவதாக  கிறிஸ் கெய்ல் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 11:04 PM GMT (Updated: 26 Nov 2019 11:04 PM GMT)

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்றும், இந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு எடுக்கப்போவதாகவும் கிறிஸ் கெய்ல் அறிவித்துள்ளார்.


* இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘4 நாள் ஆட்டத்தை கொண்ட துலீப் கோப்பை போட்டியை வீரர்கள் ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. இதனால் இந்த போட்டிக்கான அணிகளில் உத்வேகம் காணாமல் போய்விட்டது. தங்களுக்கு அடுத்து வரும் போட்டியை கருத்தில் கொண்டே இந்த போட்டியில் வீரர்கள் ஆடுகிறார்கள். உதாரணமாக ஐ.பி.எல். ஏலமோ அல்லது 20 ஓவர் போட்டி தொடரோ அடுத்து வந்தால் அதற்கு தகுந்தபடி துலீப் கோப்பை போட்டியை பயன்படுத்தி கொள்கிறார்கள். தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்தும் வீரர்கள் அணியின் நலனை கணக்கில் கொள்வதில்லை. எனவே துலீப் கோப்பை போட்டி முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கவனம் செலுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் ஆக்கி லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தபால் துறை அணி 7-0 என்ற கோல் கணக்கில் தினகர் நினைவு அணியை தோற்கடித்தது. தபால் துறை அணியில் ஆல்பர்ட் ஜான் 2 கோலும், கமலக்கண்ணன், தினேஷ்குமார், சுதர்சன், மணிகண்டன், கார்த்திக் தலா ஒரு கோலும் அடித்தனர்.

* அடுத்த மாதம் நடக்கும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு தனது பெயரை பரிசீலிக்க வேண்டாம் என்று தேர்வு குழுவினரை கேட்டுக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியின் ‘அதிரடி மன்னன்’ கிறிஸ் கெய்ல், அடுத்த ஆண்டு புத்துணர்ச்சியுடன் திரும்ப, இந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

* தென் மண்டல பல்கலைக்கழக பெண்கள் செஸ் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடந்தது. 7 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 6 வெற்றி, ஒரு டிராவுடன் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக (சென்னை) அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை பல்கலைக்கழகம் 2-வது இடத்தையும், பாரதியார் பல்கலைக்கழகம் (கோவை) 3-வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 4-வது இடத்தையும் பிடித்தன. இந்த 4 அணிகளும் ஒடிசாவில் ஜனவரி மாதம் நடைபெறும் அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டிக்கு தகுதி பெற்றன.


Next Story