சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கினர்


சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் பயிற்சியை தொடங்கினர்
x
தினத்தந்தி 28 May 2020 4:59 AM IST (Updated: 28 May 2020 4:59 AM IST)
t-max-icont-min-icon

சாய் பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர்.


* கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்திய வீரர், வீராங்கனைகள் வெளிப்புற மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தங்களது அறையில் முடங்கி கிடந்தனர். சர்வதேச போட்டிக்கு தயாராகும் வீரர்கள் அரசு வெளியிட்டு இருக்கும் வழிகாட்டுதல் நடைமுறைகளை பின்பற்றி வெளிப்புற மைதானத்தில் பயிற்சியை தொடங்கலாம் என்று கடந்த வாரம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து பாட்டியாலா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பயிற்சி மையத்தில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று தங்களது பயிற்சியை தொடங்கினர். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ் ஆகியோர் பாட்டியாலாவிலும், நடைப்பந்தய வீரர் கே.டி.இர்பான், வீராங்கனை பவனா ஜாட் உள்ளிட்டோர் பெங்களூருவிலும் வெளிப்புற மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கடைப்பிடித்து வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டனர் என்று ‘சாய்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

* கொரோனாவால் பல பேட்மிண்டன் தொடர்கள் ரத்து செய்யப்பட்டும், தள்ளிவைக்கப்பட்டும் உள்ளதால் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டிக்கான தகுதி சுற்றுக்குரிய காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021-ம் ஆண்டில் முதல் 17 வாரங்கள் தகுதி சுற்று போட்டிக்குரிய காலமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஆக்கி சம்மேளன தலைவரான நரிந்தர் பத்ரா, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒலிம்பிக் சேனல் கமிஷன் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் வெஸ்ட்இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் தனது அணியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோ பதிவில், ‘எந்தவொரு போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கலந்து கொண்டாலும், அந்த அணியில் அங்கம் வகிக்க நான் விரும்புகிறேன். ஏனெனில் அந்த அளவுக்கு கொல்கத்தா அணி நிர்வாகம் வீரர்களை தங்கள் சொந்த வீட்டில் இருப்பது போல் சவுகரியமாக பார்த்து கொள்கிறது. எப்பொழுது நான் இந்தியாவுக்கு புறப்பட்டாலும் எனது 2-வது சொந்த வீட்டுக்கு செல்வது போன்று தான் உணருகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story