டோக்கியோவில் நாளை தொடங்கும் பாராஒலிம்பிக்கில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு


டோக்கியோவில் நாளை தொடங்கும் பாராஒலிம்பிக்கில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 22 Aug 2021 6:21 PM GMT (Updated: 22 Aug 2021 6:21 PM GMT)

டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிக்கான கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (செவ்வாய்க்கிழமை) கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 5-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4, 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது. நமது அணியினர் பதக்க வேட்டையில் இரட்டை இலக்கத்தை தொடுவதை குறிக்கோளாக கொண்டு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்கள்.

கொரோனா கட்டுப்பாடு

டோக்கியோ ஒலிம்பிக் போல் பாராஒலிம்பிக்கிலும் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. ஜப்பானில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் எகிறி வருவது போட்டி அமைப்பாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டி விட்டது. இதில் டோக்கியோவில் மட்டும் 5,074 பேர் தொற்றுக்குள்ளாகி உள்ளனர். பாராஒலிம்பிக் தொடர்புடையவர்கள் இதுவரை 131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனால் கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகி விட்டதாக போட்டி அமைப்பு குழுவின் தலைமை செயல் அதிகாரி டோஷிரோ முட்டோ நேற்று தெரிவித்தார். பாராஒலிம்பிக் கிராமத்தில் உள்ள பணியாளர்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இனி வீரர், வீராங்கனைகளை போல் அவர்களுக்கும் தினந்தோறும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு அனுமதி?

ஜப்பானுக்கு வந்து 14 நாட்கள் தனிமைப்படுத்துல் நடைமுறையை முடித்த சில வீரர்கள் பொதுபோக்குவரத்தை பயன்படுத்தவும், வெளியில் சுதந்திரமாக சுற்றவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த சலுகை பறிக்கப்படுகிறது. அத்துடன், ‘ஒலிம்பிக் இடங்களில் உள்ள உணவு வசதிகளை பயன்படுத்தும்படி இத்தகைய வீரர்களை கேட்டுக் கொண்டுள்ளோம். மற்றவர்களிடம் பேசாமல் தனித்தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். இதே போல் போட்டி மற்றும் பயிற்சி தொடர்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு மட்டுமே செல்லவேண்டும்’ என்று போட்டி அமைப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாராஒலிம்பிக் போட்டியை பார்க்க ஸ்டேடியங்களுக்கு 10 ஆயிரம் பள்ளி மாணவர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளதாக டோக்கியோ கவர்னர் யுரிகோ கோய்கே தெரிவித்துள்ளார்.

Next Story