மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் போட்டியிட அனுமதிக்கக்கூடாது - பஜ்ரங், சாக்ஷி வலியுறுத்தல்


மல்யுத்த சம்மேளன தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் போட்டியிட அனுமதிக்கக்கூடாது - பஜ்ரங், சாக்ஷி வலியுறுத்தல்
x

மல்யுத்த வீரர், வீராங்கனையான பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை நேற்று சந்தித்தனர்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷனின் ஆதரவாளரை போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை சந்தித்து பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் வலியுறுத்தினர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் ஷரண் சிங் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை சாக்ஷி மாலிக், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் திடலில் திடீரென போராட்டத்தில் குதித்தனர்.

சுமார் 2 மாதம் நீடித்த இந்த போராட்டத்தை தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கினார். இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்தை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட இடைக்கால கமிட்டி நிர்வகித்து வருகிறது. பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் வீரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். தற்போது இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

வருகிற 21-ந் தேதி டெல்லியில் நடைபெறும் இந்திய மல்யுத்த சம்மேளன பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. பிரிஜ் பூஷனுக்கு வேண்டப்பட்டவரான சஞ்சய் சிங், 2010-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அனிதா ஷிரோன் ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனையான பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் ஆகியோர் மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குரை நேற்று சந்தித்தனர். அப்போது தங்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி பிரிஜ் பூஷன் ஷரண் சிங்குக்கு நெருக்கமானவர்கள் மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.


Next Story