தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி நாளை தொடக்கம்; முதல் ஆட்டத்தில் சென்னை - கடலூர் அணிகள் மோதல்


தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி நாளை தொடக்கம்; முதல் ஆட்டத்தில் சென்னை - கடலூர் அணிகள் மோதல்
x

6 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு கைப்பந்து லீக் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

சென்னை,

தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் முதல் முறையாக புரோ லீக் பாணியில் தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டி (டி.என்.வி.எல்.) நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கைப்பந்து போட்டியை மேலும் பிரபலப்படுத்தவும், இளம் வீரர்களின் திறமையை வளர்க்கவும் மற்றும் தேசிய அணியில் இடம் பெறும் தமிழக வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்குடன் உதயமாகும் இந்த போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளியின் உள்விளையாட்டு அரங்கில் நாளை (புதன்கிழமை) தொடங்கி 12-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் சென்னை ராக்ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்ஸ், குமரி போனிக்ஸ், கடலூர் வித் அஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். 2-வது மற்றும் 3-வது இடம் பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டியை எட்டும்.

போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3 லட்சமும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். முதல் நாளான நாளை இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் ஆட்டத்தில் சென்னை ராக்ஸ்டார்ஸ்- கடலூர் வித் அஸ் (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன. 2-வது ஆட்டத்தில் கிருஷ்ணகிரி புல்ஸ்- விழுப்புரம் சூப்பர் கிங்ஸ் (இரவு 8 மணி) சந்திக்கின்றன.


Next Story