உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டம்: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டம்: டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு
x
தினத்தந்தி 5 Oct 2023 8:17 AM GMT (Updated: 5 Oct 2023 8:29 AM GMT)

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடக்க ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.

ஆமதாபாத்,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 1975-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அது முதல் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி பட்டத்தை வென்றது. இந்த நிலையில் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இதற்கு முன்பு இந்தியாவில் 3 முறை உலகக் கோப்பை போட்டி நடந்தாலும் அவற்றை இந்தியா ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து தான் நடத்தியது. முதல் முறையாக இப்போது இந்தியா தனியாக இந்த போட்டியை நடத்துவது தனித்துவம் வாய்ந்ததாகும்.

நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் அரங்கேறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் முதல்முறையாக தகுதி பெறவில்லை.

இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். அதாவது ரவுண்ட் ராபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மொத்தம் 9 லீக்கில் மோதும். இதன் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்டுவதற்கு 7 வெற்றி தேவை. பல ஆட்டங்கள் மழையால் பாதிக்க வாய்ப்பு இருப்பதால் குறைந்தது 6 வெற்றியாவது பெற வேண்டும்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. முந்தைய உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இதே இங்கிலாந்திடம் மல்லுக்கட்டிய நியூசிலாந்து சூப்பர் ஓவர் முடிவிலும் சமனில் நீடித்ததால் அதிக பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு பழிதீர்க்க இது சரியான சந்தர்ப்பமாகும்.

இந்நிலையில் இந்த ஆட்டத்திற்க்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-

இங்கிலாந்து : ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் கர்ரன், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், மார்க் வூட்

நியூசிலாந்து : டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம்(கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மாட் ஹென்றி, மிட்செல் சான்ட்னர், ஜேம்ஸ் நீஷம், டிரென்ட் போல்ட்



Next Story