2-வது ஆஷஸ் டெஸ்ட்: 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!


2-வது ஆஷஸ் டெஸ்ட்: 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி..!
x
தினத்தந்தி 20 Dec 2021 10:24 AM GMT (Updated: 20 Dec 2021 10:24 AM GMT)

அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

அடிலெய்டு,

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 473 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட்டானது. 

237 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து 468 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தன்னுடைய 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் 43.2 வது ஓவரில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆலி பாப் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிலைத்து நின்று விளையாடி இருவரும் முறையே 26 ரன்கள் மற்றும் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்கள்.

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே இங்கிலாந்து அணி 113.1 ஓவர்கள் முடிவில் 192 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. 30-வது டெஸ்ட் போட்டி 26-ந்தேதி தொடங்க இருக்கிறது.


Next Story