மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான அபுதாபி கோவில்


மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான அபுதாபி கோவில்
x

ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாகும்.

மதம் அல்லது மத வழிபாடு என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது. எல்லோருக்கும் ஒரே நம்பிக்கை இருக்க வேண்டும் என்பது இல்லை. ஆனால், ஒவ்வொருவரின் நம்பிக்கையான மதத்தை பின்பற்றும்போது, அடுத்தவர் வழிபாடு செய்யும் மதத்தையும் மதிப்பதுதான் மத நல்லிணக்கமாகும். எல்லா மதமும் சிறந்ததுதான் என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டால் சகோதரத்துவம் தானாகவே தழைக்கும். ஒரு இடத்துக்கு போக எத்தனையோ வழிகள் இருந்தாலும், அவை போய் சேரும் இடம் ஒன்றுதான் என்பதுபோல அனைத்து மதங்களும் காட்டும் இலக்கு ஒன்றுதான். அந்தவகையில், அனைத்து மதத்தினரும் அடுத்த மதங்களை மதிக்கும் மனப்பாங்கு வளர வேண்டும் என்பதுதான் நல்லோரின் எண்ணமாகும்.

அத்தகைய உணர்வு இஸ்லாமிய நாடான அபுதாபியில் ஏற்பட்டு இருப்பது மத நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இஸ்லாமிய நாடாகும். இந்த நாட்டில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாடு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து மத வழிபாடுகளையும் மதிக்கும் நாடாகவே இருந்து வருகிறது. அங்கு ஒரே வளாகத்தில் மசூதியும், கிறிஸ்தவ தேவாலயமும் இருப்பது அதன் தனி சிறப்பாகும். இது மட்டுமல்ல, இந்த நாட்டில் இந்து கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், யூத ஆலயங்கள், சீக்கியர்களின் குருத்துவாரா கட்டிக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் சுவாமி நாராயண் கோவிலை கட்ட வேண்டும் என்று அங்கு வாழும் இந்துக்கள் விருப்பப்பட்டனர். இந்த கோரிக்கை வலுவடைந்த நேரத்தில், 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அபுதாபி சென்று இருந்தார். அப்போது, பட்டத்து இளவரசராகவும், தற்போதைய அதிபராகவும் உள்ள ஷேக் முகமது பின் நயான், அபுதாபியில் இந்து கோவிலை கட்டுவதற்கு, அதாவது சுவாமி நாராயண் கோவிலை கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை 2019-ல் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் வழங்கியது. ஆக மொத்தம் 27 ஏக்கர் நிலம் இந்து கோவில் கட்ட கிடைத்த நிலையில், இந்த கோவிலுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். இந்த கோவில் கட்டுமான பணிகளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்த பாப்ஸ் (போச்சன்வாசி ஸ்ரீ அக்ஷார் புரொஷோத்தம் சுவாமி நாராயண் சஸ்தா) என்ற அமைப்பு எடுத்துக்கொண்டது.

ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட அபுதாபி கோவில் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பதற்கு காரணம், இந்த கோவில் ஒரு இஸ்லாமிய நாட்டில் இருக்கிறது. கோவிலை கட்ட நிலம் கொடுத்த அதிபர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர். கோவில் கட்டிடத்துக்கான தலைமை வடிவமைப்பாளர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். திட்ட மேலாளர் சீக்கியர். கோவிலின் அடித்தள வடிவமைப்பாளர் புத்த மதத்தைச் சேர்ந்தவர். கட்டுமான நிறுவனம் பார்சி இனத்தைச் சேர்ந்தவருக்கு சொந்தமானது. இந்த நிறுவனத்தின் ஒரு இயக்குநர் ஜெயின் மதத்தை சேர்ந்தவர். இந்த கோவில் அயோத்தி ராமர் கோவிலைப்போல மிக விரைவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திரமோடியே இந்த கோவிலைத் திறந்து வைத்தார். இந்த கோவில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஒரு கலாசார அடையாளமாக விளங்குகிறது.


Next Story