நல்லுறவால்தான் கப்பலை தடுக்க முடியும்


நல்லுறவால்தான் கப்பலை தடுக்க முடியும்
x
தினத்தந்தி 21 Aug 2022 7:45 PM GMT (Updated: 2022-08-22T01:34:04+05:30)

இந்தியாவை சுற்றிலும் சீனா தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டது. இந்தியா தனது 75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கொண்டாடிய நேரத்தில், இந்தியாவின் வட எல்லையிலும் தென் எல்லையிலும் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளையும், உளவு முயற்சியையும் அரங்கேற்றியது.

காலையில் ஒட்டுமொத்த இந்தியாவில் அனைத்து இடங்களிலும் தேசியகொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்கச்செய்த அதேநேரத்தில், சீனாவின் அரசு டெலிவிஷனான, 'சீனா சென்ட்ரல் டெலிவிஷன்'-ல் இந்திய எல்லைக்கு அருகில் காரகோரம் மலைப்பகுதியில் உள்ள சமதள பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகை செய்யும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

மிகவும் தாழ்வான உயரத்தில் பறந்துகொண்டிருக்கும் விமானத்தின் மீது புதிய ரக ஏவுகணை கொண்டு தாக்கும் காட்சிகளும், தரையில் இருந்து ஏவுகணை தாக்குதல்கள் போன்ற பல போர் ஒத்திகைகள் பெருமையுடன் காட்டப்பட்டன. இந்தியாவில் மக்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியுடன் திளைத்துக்கொண்டிருந்த அதேநேரத்தில் இந்திய எல்லைக்கு அருகே, இந்த ஒத்திகையை வேண்டுமென்றே தன் டெலிவிஷனில் காட்டியது சீனா. 15-ந் தேதியன்று இந்திய கடற்படையில் பொதுவாக ரோந்து பணிக்காக பயன்படுத்தும் 'டோர்னியர்' ரக விமானம் ஒன்று இலங்கைக்கு நன்கொடையாக இந்தியா வழங்கியது. இதற்கு அடுத்த நாள் 'யுவான் வாங்-5' என்ற பெயரில் சீனாவின் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் ஆய்வுப்பணி கப்பல் என்று பதிவு செய்யப்பட்டுள்ள உளவு கப்பல், இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்து நங்கூரமிட்டது.

இந்த துறைமுகத்தை, தான் வாங்கிய கடனை கழிப்பதற்காக இலங்கை கடந்த 2017-ம் ஆண்டு சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு வழங்கி இருக்கிறது. இந்த கப்பலை எரிபொருள் நிரப்புவதற்காகவும், உணவு பொருட்களை ஏற்றுவதற்காகவும் இந்த துறைமுகத்துக்கு வர ஜூலை 12-ந் தேதியன்று இலங்கையால் ராஜ்ய உறவு ஒப்புதல் வழங்கப்பட்டது. கப்பலை நிறுத்துவதற்கான அனுமதி முதலில் இந்த மாதம் 11-ந் தேதி முதல் 17-ந் தேதிவரையிலான காலகட்டத்துக்கு வழங்கப்பட்டது.

இந்த கப்பல் ஒரு உளவு கப்பல் என்ற வகையில் பாதுகாப்பு கருதி இதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று இந்தியா தன் எதிர்ப்பை இலங்கையிடம் தெரிவித்ததை தொடர்ந்து, இலங்கை வெளிவிவகாரத்துறை சீன தூதரகத்திடம் இந்த பயணத்தை ஒத்தி வைக்கும்படி கேட்டதற்கிணங்க, இந்த கப்பல் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வராமல் நடுக்கடலில் நின்று கொண்டிருந்தது. என்றாலும் தொடர்ந்து சீனா கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இப்போது இந்த கப்பல் இலங்கைக்கு வந்துவிட்டது. இன்று (திங்கட்கிழமை) வரை அங்கு நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது பற்றி சீனா கருத்து தெரிவிக்கும்போது, 'யுவான் வாங்-5' கப்பலின் கடற்பகுதி விஞ்ஞான ஆராய்ச்சி நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களின் அடிப்படையில்தான் நடக்கிறதே தவிர, வேறு எந்த நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கோ, பொருளாதார நலன்களுக்கோ எந்த விளைவையும், எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே மூன்றாவது நாடு இதை தடுக்க கூடாது என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த கப்பல் 750 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியை வேவு பார்க்கும் திறன் கொண்டது என்ற வகையில், இதன் மூலம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களை வேவு பார்க்க முடியும் என்ற இந்தியாவின் கவலை நியாயமான ஒன்றுதான் என்றாலும், சர்வதேச சட்டங்கள் இதுபோன்ற கப்பல்களுக்கு உணவுப்பொருள், எரிபொருள் நிரப்புவதற்கு தடை விதிப்பதில்லை. அந்த உரிமையை பயன்படுத்தி கொண்டு சீன கப்பல் வந்திருக்கிறது. ஆக, இத்தகைய கப்பல்களை இனி இலங்கை அனுமதிக்காமல் தடுக்க வேண்டும் என்றால், அது இலங்கையோடு இந்தியா கொண்டுள்ள நல்லுறவு-நல்லெண்ணத்தை இன்னும் வலுப்படுத்துவதன் மூலமே முடியும். சட்டம் அனுமதிப்பதை நல்லுறவால் தடுத்து விட முடியும்.


Next Story