இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மதிப்பீடு


இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மதிப்பீடு
x

மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் அவர்களின் இல்லங்களுக்கு அருகில் சென்று கற்றுக்கொடுக்கும் திட்டம் இது.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி சொன்ன ஒரு கருத்து இன்றளவும் எல்லோராலும் மேற்கோள் காட்டப்படுகிறது. சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கான திட்டங்களுக்கு அரசு ஒரு ரூபாய் ஒதுக்கினால் அதில் 15 காசுகள்தான் யார் பயனடைவதற்காக ஒதுக்கப்படுகிறதோ? அவர்களுக்கு போய் சேருகிறது என்று கூறினார். அவர் கூறிய இந்த சிந்திக்கவைக்கும், சீர்திருத்தவைக்கும் கருத்து சுப்ரீம் கோர்ட்டில் கூட நீதிபதிகளால் கூறப்பட்டுள்ளது. ஆக அரசு நல்லெண்ணத்தோடு பல திட்டங்களைத் தீட்டி அமல்படுத்தும்போது, எப்படி ஒரு கிணற்றில் இருந்து, ஏரியில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும்போது அந்த குழாயில் ஆங்காங்கு துவாரங்கள் இருந்து, அதன் வழியாக தண்ணீர் வீணாகி, இறுதியில் பயிர்களுக்கு கொண்டு வரும்போது குறைவான தண்ணீரே வந்து சேருகிறதோ, அதுபோல அரசின் திட்டங்களிலும் செயல்பாடுகளின்போது குறைகள் இருந்தால் நிறைவான பயன்கள் கிடைப்பது இல்லை.

அரசு திட்டம் தீட்டி, நிதியும் ஒதுக்கிய பின்பு அது அமலுக்கு வந்தபின், அந்த திட்ட பயன்கள் பெரும்பாலும் மதிப்பிடப்படுவதில்லை. அந்த குறையைப் போக்கும் வகையில், 'இல்லம் தேடி கல்வி திட்டத்தின்' தாக்க மதிப்பீடுகளை ஆய்வு செய்யும் முயற்சிகளை தமிழக அரசின் கல்வித்துறை கையில் எடுத்துள்ளது. கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தொற்று வந்துவிடக்கூடாதே, மாணவர்களின் உயிர்தானே எல்லாவற்றையும் விட முக்கியம் என்ற அடிப்படையில், பள்ளிக்கூடங்களுக்கு அரசு விடுமுறை விட்டது. ஏறத்தாழ 2 ஆண்டுகள் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டது. ஆனால் தொடக்க, நடுநிலை பள்ளிக்கூட மாணவர்களால் ஆன்லைன் மூலம் கல்விகற்க முடியாது என்ற வகையில், அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா காரணமாக 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை பள்ளிக்கூடங்களில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடு செய்வதற்காக தன்னார்வலர்களைக் கொண்டு தினமும் 1 முதல் 1½ மணி நேரம் அதாவது, மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் அவர்களின் இல்லங்களுக்கு அருகில் சென்று கற்றுக்கொடுக்கும் திட்டம் இது. தமிழகத்தில் உள்ள 92 ஆயிரத்து 297 குடியிருப்புகளில் உள்ள 34 லட்சத்து 5 ஆயிரத்து 856 மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயனடைய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். முழுக்க முழுக்க தமிழக அரசின் நிதியாக ரூ.200 கோடி செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. 2 லட்சம் தன்னார்வலர்கள் இந்த திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்து வருகின்றனர்.

வேலையில்லாமல் இருக்கும் 2 லட்சம் பேர்களை இந்த திட்டத்தின் தன்னார்வலர்களாக நியமித்து அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவிதொகையும் வழங்கப்படுகிறது. இந்த சீர்மிகு திட்டத்தை கடந்த 27.10.2021 அன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா முதலியார்குப்பம் கிராமத்தில் தொடங்கிவைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி திட்ட மையத்தை, திருவண்ணாமலை மாவட்டம் ஆராஞ்சி ஊராட்சியில் தொடங்கிவைத்தார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோடுபோட்டால் ரோடு போட்டுவிடுவார் என்று பாராட்டப்படும் பள்ளிக்கூட கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இப்போது இந்த திட்டத்தின் தாக்க மதிப்பீடை ஆய்வுசெய்வதற்காக, திறமைவாய்ந்த தனியார் நிறுவனத்தை தேர்வுசெய்ய டெண்டர் கோர உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கற்றல்திறன் மேம்பாடு எந்தவகையில் இருக்கிறது? இந்த திட்டம் எந்தவகையில் பலன் அளிக்கிறது? என்பது உள்பட பல மதிப்பீடுகள் இந்தமாதம் முதல் 8 மாதங்களுக்கு செய்யப்பட இருக்கிறது. இது மிகவும் பாராட்டுக்குரிய, வரவேற்புக்குரிய முடிவு. இதுபோல அரசின் அனைத்து திட்டங்களையும் மதிப்பீடு செய்யவேண்டும் என்பது பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.


Next Story