சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு


சுப்ரீம் கோர்ட்டின் வரவேற்கத்தக்க தீர்ப்பு
x
தினத்தந்தி 16 Feb 2024 10:00 PM GMT (Updated: 16 Feb 2024 10:01 PM GMT)

அரசியல் சாசன அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் தனி நபர், நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் இந்த திட்டத்தை ரத்து செய்து ஒரு வரலாற்றை படைத்துவிட்டது.

வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைக்கான தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் சூழ்நிலையில், நெத்தியடியாக ஒரு அதிரடி தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. பா.ஜனதா ஆட்சி காலத்தில், 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லியால் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, நிறுவனங்களோ, தனி நபரோ அரசியல் கட்சிகளுக்கு 'செக்' மூலமாக நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் பத்திரங்களை நன்கொடையாக கொடுக்க முடியும். இந்தபத்திரங்களை ரூ.1,000, ரூ.10 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி என்ற மதிப்பில் வாங்கிக்கொள்ள முடியும். இந்த பத்திரத்தை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

இவ்வாறு தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் பற்றிய விவரங்கள் எதுவும் அதில் இருக்காது. மேலும், இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம் மற்றும் கம்பெனி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பே இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் தனி நபர், நிறுவனங்கள் நன்கொடை வழங்கும் இந்த திட்டத்தை ரத்து செய்து ஒரு வரலாற்றை படைத்துவிட்டது.

"கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசியல் சட்டத்துக்கு விரோதமான, ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டம் இது. எனவே, இந்த திட்டமும் இதற்காக மற்ற சட்டங்களில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களும் ரத்து செய்யப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வருகிற மார்ச் 6-ந்தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யவேண்டும். தேர்தல் ஆணையம் அதை 13-ந்தேதிக்குள் தன் இணையதளத்தில் வெளியிடவேண்டும்" என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆக, யார் யார், எந்தெந்த கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள்? என்பதை தேர்தல் கமிஷன் இணையதளத்தில் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள முடியும்.

ஒரு கம்பெனி ஏதாவது நன்கொடை கொடுத்தால் அதற்கு வரிகட்டவேண்டும். ஆனால், தேர்தல் பத்திரங்கள் வாங்கினால் வரி கிடையாது என்பது ஏற்புடையது அல்ல. இந்த திட்டம் ஒரு வெளிப்படைத்தன்மையற்ற திட்டமாகும். அரசியல் சட்டத்தின் 19 (1) (ஏ)-ல் கூறப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, தகவல் அறியும் உரிமையை மீறுவதாக இருக்கிறது. இந்த திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததன் மூலம் அரசியல் கட்சிகளின் நன்கொடையில் ஒரு வெளிப்படைத்தன்மை ஏற்பட்டுவிடும். தேர்தல் பத்திரங்களில் 94 சதவீதம் ரூ.1 கோடி வழங்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. இந்த தீர்ப்பு தேர்தல் நடைமுறைகளை தூய்மைப்படுத்தும். ஆனால், இந்த தீர்ப்பை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா?, சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யுமா?, அரசியல் கட்சிகள் நன்கொடையை பெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாற்றம் கொண்டுவரும் வகையில் அவசர சட்டம் வருமா? என்பது வரப்போகும் நாட்களில் தெரியும்.


Next Story