நக்சலைட்டுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தமிழர்


நக்சலைட்டுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தமிழர்
x

நக்சலைட்டுகளுக்கு பல ஆண்டுகளாக சிம்மசொப்பனமாக, ஒரு தமிழ் போலீஸ் உயர் அதிகாரி விளங்குகிறார் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையாகும்.

சென்னை,

சத்தீஷ்கார் மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட அரசாங்கம் இருந்தாலும், அதற்கு இணையாக அந்த மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் தனியாக நடக்கிறது. போலீசாரையும், துணை ராணுவத்தினரையும் எதிரிகளாக பாவித்து, நக்சலைட்டுகள் அடிக்கடி தாக்குதல் நடத்துகிறார்கள். அவர்களை ஜனநாயக பாதைக்கு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் எவ்வளவோ முயற்சிகளை செய்தாலும் இன்னும் வெற்றியை காண முடியவில்லை. நக்சலைட்டுகளின் தாக்குதலில் எவ்வளவோ போலீசார், எல்லைப்பாதுகாப்பு படையினர், துணை ராணுவப்படையினர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஏராளமான நக்சலைட்டுகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுவாக சத்தீஷ்கார் மாநிலத்தில் எல்லைப்பாதுகாப்பு படையினர், போலீசார் உயிரைப்பணயம் வைத்து பணிபுரிகிறார்கள். அதிலும் நக்சலைட்டுகள் தங்கள் ஆதிக்கத்தை நடத்தும் பஸ்தார் சரகத்தில் உள்ள சுக்மா, பிஜப்பூர், நாராயண்பூர், கான்கர் மாவட்டங்களில் பணிபுரியும் போலீசாருக்கு நித்தம், நித்தம் செத்துப்பிழைக்க வேண்டிய நிலைதான் இருக்கிறது. அடர்ந்த காடுகளையும், மலைப்பிரதேசங்களையும் கொண்ட அந்தப் பகுதிகளில் ஆங்காங்கு நக்சலைட்டுகள் தங்கள் ஆதிக்கத்தை வைத்து இருக்கிறார்கள். நக்சலைட்டுகளும் போலீசார் போல சீருடை அணிந்து அனைத்து வகையான நவீன ஆயுதங்களைக்கொண்டே சண்டையிடுகிறார்கள். இத்தகைய பஸ்தார் சரகத்தில் நக்சலைட்டுகளுக்கு பல ஆண்டுகளாக சிம்மசொப்பனமாக, ஒரு தமிழ் போலீஸ் உயர் அதிகாரி விளங்குகிறார் என்றால், அது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையாகும்.

அந்த ஐ.பி.எஸ். அதிகாரியின் பெயர் சுந்தரராஜ் பட்டிலிங்கம். கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர். ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, பஸ்தார் மாவட்டத்திலேயே உதவி போலீஸ்சூப்பிரண்டு, மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு, சரக டி.ஐ.ஜி., இப்போது பஸ்தார் மண்டல ஐ.ஜி என்று போலீஸ்துறையில் இதுவரை அனைத்து பதவிகளையும் பஸ்தாரை சுற்றியே வகித்து வருகிறார். துணிச்சலுக்கு மறுபெயர் சுந்தரராஜ் என்ற வகையில், அவரது பணி அமைந்துள்ளது. சத்தீஷ்கார் மாநிலத்தில் பஸ்தாரில் கடந்த 19-ந்தேதி தேர்தல் நடந்தது. அதுபோல கான்கர் மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

இவர்களை பிடித்துக்கொடுத்தால் ஒருவருக்கு ரூ.25 லட்சம் என்று போலீசாரால் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டு தலைவர்கள் சங்கர், லலிதா ஆகியோர் தலைமையிலான ஒரு கூட்டம் இந்த தேர்தலை சீர்குலைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் திட்டம்தீட்டி வருவதாக தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே ஐ.ஜி. சுந்தரராஜ் ஒரு திட்டத்தை வகுத்துக்கொடுத்து மாவட்ட ஆயுதப்படை போலீசார், எல்லைப்பாதுகாப்பு படையினரைக்கொண்ட வீரர்களை களத்தில் இறக்கினார். அவர்கள் கான்கர் மாவட்டத்தில் உள்ள சோட்டாபேட்டியா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பினாகுந்தா, கோரக்குட்டா வனப்பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்டுகளை சுற்றி வளைத்தனர். போலீசார் மீது பகல் 2 மணிக்கு தொடங்கி 4 மணிநேரம் நக்சலைட்டுகள் துப்பாக்கிசூடு நடத்தினர். போலீஸ் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த சண்டையில் 15 பெண் நக்சலைட்டுகள் உள்பட 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 எல்லைப்பாதுகாப்பு படை, மாவட்ட ஆயுதப்படை போலீசார் காயம் அடைந்திருக்கிறார்கள். நக்சலைட்டுகளிடம் இருந்து ஆயுதக்குவியல் கைப்பற்றப்பட்டது. 2 ஆயிரம் நக்சலைட்டுகள் ஆட்சி செலுத்தி வந்த சத்தீஷ்காரில் இப்போது 700 பேர்தான் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு சுற்றித்திரிகிறார்கள். இந்த ஆண்டு இதுவரை மட்டும் 79 நக்சலைட்டுகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மிக விரைவில் அந்த பகுதியில் வாழும் மக்களுக்கு ஜனநாயக விழிப்புணர்வை ஏற்படுத்தி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, அவர்களை ஜனநாயகத்துக்குள் கொண்டுவர முயற்சிகள் நடக்கிறது. நக்சலைட்டுகளையும் திருத்தி நல்வழிக்கு கொண்டுவர முயற்சி செய்வோம், இல்லையென்றால் பிடித்துவிடுவோம் என்று சபதம் எடுத்துக்கூறுகிறார் ஐ.ஜி.சுந்தரராஜ்.


Next Story