தகைசால் தமிழர் !


தகைசால் தமிழர் !
x

இந்த ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருது, திராவிடர் கழக தலைவரான 90 வயது கி.வீரமணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும், தமிழ் இனத்தின் மேன்மைக்கும் பாடுபட்டவர்களை தாய்த் தமிழ்நாடு சரித்திர காலம் தொட்டே மறப்பதில்லை. அந்த வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல், இதுபோன்ற சமூக நலனுக்காக பங்காற்றியவர்களுக்கு உரிய கவுரவத்தை அளித்துவருகிறார். அவர் ஆட்சி பொறுப்பை ஏற்ற தொடக்கத்தில், 18-7-2021 அன்று மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்-அமைச்சருக்கு ஒரு கோரிக்கை அனுப்பியிருந்தார். அதில், "சாதனை செய்து சரித்திரத்தில் இடம்பெற்ற மாபெரும் மனிதர்களுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசாங்கம் 'பாரத ரத்னா' மற்றும் 'பத்ம விருது'களை வழங்குவதுபோல, தமிழ்நாட்டிலும் நாட்டுக்கும், இனத்துக்கும் மாபெரும் பங்காற்றியவரை பெருமைப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று ஒரு விருதை முதல்-அமைச்சர் வழங்கினால் சிறப்பாக இருக்கும்" என்று கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை தமிழக அரசு மின்னல் வேகத்தில் பரிசீலனை செய்து, ஓர் உத்தரவை பிறப்பித்தது. பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை மனுவை ஜூலை 18-ந்தேதி அனுப்பியிருந்தார். 26-ந்தேதி அரசு பிறப்பித்து இருந்த உத்தரவில், "தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்துக்கும் பங்காற்றிய மாமனிதருக்கு ஆண்டுதோறும் 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் ஒரு விருது வழங்கப்படும். இந்த விருதுபெறும் விருதாளருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ், ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும். இந்த விருதுக்கான விருதாளரை தேர்ந்தெடுக்க முதல்-அமைச்சர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும்" என்று கூறப்பட்டிருந்தது.

அடுத்த சில நாட்களில் இந்த குழு கூடி, 2021-ம் ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான 100 வயதைக் கடந்த என்.சங்கரய்யாவை தேர்ந்தெடுத்தது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, பல்வேறு தியாகங்களை செய்த என்.சங்கரய்யா வீட்டுக்கே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று இந்த விருதை வழங்கினார். 'தகைசால் தமிழர்' விருதுடன் வழங்கப்பட்ட ரூ.10 லட்சத்தை என்.சங்கரய்யா கொரோனா நிவாரண பணிகளுக்காக, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அப்போதே வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

கடந்த ஆண்டுக்கான விருதாளராக, விடுதலை போராட்ட வீரராகவும், ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுத்து, சமூக நல்லிணக்கத்துக்காகவும், சுற்று சூழலுக்காகவும் பாடுபட்டுவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கு இந்த விருதையும், பரிசு தொகையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மிகவும் மகிழ்வுடன் விருதைப் பெற்றுக்கொண்ட 97 வயதான ஆர்.நல்லகண்ணு அந்த ரூ.10 லட்சத்துடன் மேலும் ரூ.5 ஆயிரத்தை சேர்த்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி, தன் தன்னலமற்ற சேவையை வெளிக்காட்டினார்.

இந்த ஆண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருது, திராவிடர் கழக தலைவரான 90 வயது கி.வீரமணிக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளம் வயது முதல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, சமூக பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு ஆதரவாக, தந்தை பெரியார் நடத்திய சமூக பிரசாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு, 40 முறை சிறைவாசம் அனுபவித்தவரும், 60 ஆண்டுகளாக 'விடுதலை' ஆசிரியராக பணியாற்றி, இன்றும் தொய்வில்லாமல் சமுதாயப் பணியை ஆற்றிவருபவருமான கி.வீரமணி இந்த விருதுக்கு மிகவும் பொருத்தமானவர். இந்த விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 3 தலைவர்களுமே தமிழகத்தின் நன் முத்துக்கள்.


Next Story