பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிய 11 நாள் விரதம் !


பிரதமர் நரேந்திரமோடி தொடங்கிய 11 நாள் விரதம் !
x
தினத்தந்தி 16 Jan 2024 11:45 PM GMT (Updated: 18 Jan 2024 5:44 AM GMT)

அயோத்தியில் 22-ந்தேதி நடக்கும் பிரதிஷ்டைக்கு பிரதமர் மிகவும் பக்தி வைராக்கியத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

ஆங்கிலத்தில் மிக முக்கியமான நாளை 'டி டே' என்பார்கள். அதுபோல, நாட்டில் மிக முக்கியமான நாள் வருகிற 22-ந் தேதி ஆகும். நீண்ட பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த அயோத்தி ராமர் கோவிலின் பிரதிஷ்டை, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடக்கிறது. இது பா.ஜ.க.வின் நீண்டகால குறிக்கோளாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவோம் என மக்களுக்கு பா.ஜனதா சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது. 'நாட்டு மக்கள் மனம் குளிர சொன்னதை செய்துவிட்டோம்' என்ற பெருமையுடன் பிரதமர் நரேந்திரமோடி இந்த பிரதிஷ்டையில் கலந்துகொள்கிறார்.

'எல்லா சாலைகளும் ரோமாபுரியை நோக்கி' என்ற பழமொழியை போல, 22-ந்தேதி, 'எல்லா சாலைகளும் அயோத்தியை நோக்கி' என்ற வகையில், லட்சக்கணக்கான மக்கள் அங்கு செல்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனைத்து வசதிகளையும் கொண்ட கூடாரங்கள், பக்தர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. அயோத்திக்கு வரமுடியாத ஏராளமானவர்களுக்கு, வீட்டில் இருந்தே வழிபட அட்சதை வழங்கப்பட்டு இருக்கிறது. 'இந்த புனிதமான நாளை நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தீபாவளிபோல கொண்டாட வேண்டும்' என்று, பல நாட்களுக்கு முன்பே பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விழாவுக்காக பிரதமர் நரேந்திரமோடி 11 நாள் விரதத்தை தொடங்கி விட்டார். இதை அவர் நாசிக்கில் உள்ள பஞ்சவடியில் இருக்கும் காலாராம் ராமர் கோவிலில் தொடங்கினார். இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குதான் ராமர், சீதா பிராட்டியார், லட்சுமணன் ஆகியோர் வனவாசத்துக்கு முன்பு நிறைய நேரத்தை செலவிட்டதாக புராணங்கள் கூறுகின்றன. அதே கோவிலுக்கு சென்றதோடு மட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திரமோடி அங்கு 'சிங்கி' அடித்து பஜனையும் பாடினார். அதுமட்டுமல்லாமல், அவரே வாளியில் தண்ணீர் எடுத்து துடைப்பம் மூலம் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தார். அன்று முதல் 11 நாட்கள் விரதம் இருப்பதாக அவர் அறிவித்தார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "இந்த மங்களகரமான நிகழ்வை காணும் ஒரு அதிர்ஷ்டசாலியாக நான் என்னை கருதுகிறேன். இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் பிரதிநிதியாக கலந்துகொள்ளும் ஒரு கருவியாக இறைவன் என்னை படைத்துள்ளார்" என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார். இந்த ஆன்மிக பயணத்தில், கீதையில் கூறியுள்ளபடியும், சில துறவிகள் மற்றும் மகான்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 'யம -நியமம்' அதாவது தார்மீக மற்றும் நெறிமுறை நடத்தை கோட்பாடுகளின் அடிப்படையில், இந்த11 நாள் விரதத்தை கடைபிடிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

ஆக மொத்தத்தில், அயோத்தியில் 22-ந்தேதி நடக்கும் பிரதிஷ்டைக்கு பிரதமர் மிகவும் பக்தி வைராக்கியத்தோடு தயாராகிக் கொண்டிருக்கிறார். பிரதமரோடு ராமர் பக்தர்களும், அந்த மங்கள நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்துக்கள் போகும் ஒரு ஆன்மிக தலமாக, அதிலும் மிக முக்கிய ஆன்மிக தலமாக அயோத்தி தலையெடுத்துவிட்டது. இனி அனைத்து சாலைகளும் அயோத்தியை நோக்கி என்பது போல, லட்சக்கணக்கான மக்கள் 22-ந்தேதி அயோத்தியில் நடக்கும் பிரதிஷ்டையில் கலந்துகொள்வார்கள். மற்றவர்களும், அதாவது அயோத்திக்கு செல்ல முடியாதவர்களுக்கும் அவர்கள் எண்ணமெல்லாம் அயோத்தியை நோக்கியே இருக்கும்.


Next Story