மகாதேவமலையில் காலடி பதித்த அர்த்தநாரீஸ்வரர்
மகாதேவ மலையில் உள்ள இறைவனின் காலடி தடங்களை வழிபடும் தம்பதியர்களிடையே ஒற்றுமை பலப்படும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.
வேலூர் மாவட்டத்தில் உள்ளது, கே.வி.குப்பம். கீழ்வழித்துணையாங்குப்பம் என்பதன் சுருக்கமே, கே.வி.குப்பம் ஆகும். இந்த ஊரை அடுத்த காங்குப்பம் என்ற கிராமத்தில் 75.09 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது, மகாதேவ மலை. இந்த மலை மீது மகாதேவசாமி சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள சிவலிங்கமானது சுமார் 1,600 ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாக தோன்றியதாக சொல்லப்படுகிறது. 600 ஆண்டு களுக்கு முன்பு விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரால் இந்தக் கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தக் கோவிலை மகானந்த சித்தர் என்பவர் நிர்வகித்து வருகிறார்.
விஜயநகர பேரரசருக்கு முன்பு, இந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள், சுயம்புவாக இருந்த லிங்கத்தின் பாணத்துடன், ஆவுடையாரை இணைத்து சிவலிங்கத்தை முழுமைப்படுத்தியதாக தல வரலாறு சொல்கிறது. பின்னர் மலை மீது விநாயகர், முருகன் சன்னிதிகளையும் அமைத்திருக்கிறார்கள். மூலவருக்கு நேர் பின்புறத்தில் நின்ற திருக்கோலத்தில் திருமாலுக்கு ஒரு சிலை வைக்கப்பட்டது. மலையின் உச்சியில் உள்ள மூலவரைச் சுற்றி கருங்கற்களால் கருவறையை எழுப்பி, கோவிலாக வைத்து வழிபட்டு வந்தனர். அதன்பிறகே விஜயநகரப் பேரரசரால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.
கோவிலின் ராஜகோபுரத்தை ஒட்டி அமைந்த தீர்த்தக்குளத்துக்கு மேல்பகுதியில் சிறிதும், பெரிதுமான 2 காலடி தடம் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. அதில் சிறிய 'காலடி தடம்' காமாட்சியம்மனையும், 'பெரிய காலடி' தடம் மகாதேவசாமியையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலடி தடம் மலைமீது சிவபெருமான் வந்து ஆணும், பெண்ணும் சமம் என்பதை வலியுறுத்தி அர்த்தநாரீஸ்வரராக நின்றபோது ஏற்பட்ட காலடி தடம் என்று கோவில் தல வரலாறு சொல்லப்படுகிறது. இந்த இரண்டு காலடிகளையும், 'பாத தரிசனம்' என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதனை வழிபடும் தம்பதியர்களிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பது ஐதீகம்.
இந்தக் கோவிலை அடைய அடிவாரத்தில் இருந்து 747 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகள் அனைத்தும் பாறைகளிலேயே செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் கடந்து மூலஸ்தானம் வரை செல்ல புதியதாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மலையின் அடிவாரத்தில் பெரிய அளவிலான பழைய குளம் ஒன்று படிக்கட்டு வசதியுடன் காணப்படுகிறது. அந்த குளத்தை ஒட்டி 100 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் அருகில் மகாதேவ மலைக்கு படிக்கட்டுகள் அமைத்துக் கொடுத்த தேவானந்தர் என்ற சித்தரின் ஆசிரமமும், அவரது உருவப்படத்துடன் ஜீவ சமாதியும் காணப்படுகிறது.
இவருக்கு முன்னதாக மலையம்மா சுவாமிகள், ஏகாம்பர சுவாமிகள், யாழ்ப்பாண சுவாமிகள் மற்றும் சித்தர்கள் எனப் பலரும் இந்த மலையில் ஆன்மிகப் பணிகளில் முன்னோடிகளாகத் திகழ்ந்துள்ளனர். இவர்களின் சமாதிகளும் இந்த மலையடிவாரத்தில் உள்ளன. இப்பகுதியில் உள்ள நாகலிங்க மரம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மரத்தில் இருந்து நாகலிங்கப் பூவை, தினசரி சிவ பூஜைக்காக, மலை மீது கொண்டு சென்று பூஜை செய்கின்றனர்.
ஒரு காலத்தில் இந்த மலையின் உச்சியில் அமைந்த மகாதேவர் கருவறையை சுற்றி வலம் வர இடம் இல்லாமல் இருந்தது. இதைச் சுற்றி இருந்த பெரும் பள்ளங்களின் மீது தூண்கள் அமைத்து, அதன்மீது தேர் மண்டபம், நவக்கிரகம், ஆஞ்சநேயர், அன்னப்பூரணி, திருமால் திருமேனிகள் அமைக்கப்பட்டன. பெரிய அளவில் நந்தி மண்டபம் கட்டப்பட்டதும் விசாலமான இடம் வந்தது. இதனால் பக்தர்கள் மலையின் எந்தப் பகுதியிலும் இருந்து இறைவனை தரிசிக்க முடியும்.
ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் விதமாக, சிவபெருமானுக்காக அமைந்த இந்த ஆலயத்தில், திருமாலின் தசாவதாரக் காட்சிகளை விளக்கும் சிற்பங்கள் பலவும், கிழக்கு நோக்கிய நுழைவு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கருமைநிறக் கல், வெள்ளை சலவைக்கல் போன்றவற்றால் சிலை வடித்துள்ளனர். 18 சித்தர்களின் சிற்பங்கள், கலைநயத்துடன் மிகவும் பொலிவாக அமைக்கப்பட்டு உள்ளன. மலைமீது அமைந்த தீர்த்தக்குளத்தில் சூரியக்கதிர்கள் விழுவதில்லை.
கோவில் வளாகத்தில் தினமும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில் அன்னதானக்கூடம், பக்தர்களின் வருகைக்கேற்ப உடனடியாக உணவு சமைக்க, சமையல் கூடம், அரிசி, மளிகைப் பொருட்கள் சேகரிப்பு கிடங்கு போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மலைக் கோவிலில் வாரம் ஒரு முறை இலவச சித்த மருத்துவ முகாமும் நடத்தப்படுகிறது. ஆடிக்கிருத்திகை விழா இங்கு வெகு விமரிசையாக நடைபெறும். எனவே அந்த நாளில் இந்த மலைக்கோவில் அமைந்த பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பஸ் வசதி, வாகன நிறுத்தும் இடம் போன்றவை ஏற்படுத்தப்படுகிறது.
மலையைச் சுற்றிலும் இறைவனின் தேர் வீதி உலா நடைபெறும் வகையில் தார் சாலைகள் அமைக்கப்பட்டு, தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
அமைவிடம்
காட்பாடியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும், குடியாத்தத்தில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது காங்குப்பம். காட்பாடியில் இருந்து குடியாத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழைய கிருஷ்ணாபுரம் கிராம பஸ் நிறுத்தத்தில் இறங்கி, வடக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் மகாதேவமலையை அடையலாம்.