மகம் நட்சத்திரக்காரர்கள் வழிபடும் தவசிமேடை மகாலிங்கேஸ்வரர் ஆலயம்
மகிரிஷிகள், சித்தர்களுக்கு பிடித்த பொரி உருண்டைகளை படைத்து அடியார்களுக்கு தானமாக வழங்கும் பக்தர்களின் துன்பங்கள் விலகுவதாக ஐதீகம்.
இறைவனை நினைத்து தியானித்து ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்த இடங்களில் ஒருவித அதிர்வலைகள் இருக்கும். நாம் அங்கு ஒரு சில மணித்துளிகள் அமர்ந்து தியானம் செய்தாலே மிகுந்த நற்பலன் உண்டாகும். அத்தகைய தவசக்தி மிகுந்த இடத்தில், சர்வமும் நிறைந்த சிவபெருமானின் கோவிலும் அமைந்த இடம் தான் திண்டுக்கல் அருகே உள்ள தவசிமேடை ஒடுக்கம் மகாலிங்கேசுவரர் ஆலயம்.
ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்த இடம் என்பதால் 'தவசிமேடை' என்றும், அந்த மகான்கள் உடலையும், மனதையும் ஒடுக்கி வழிபட்டு ஜீவசமாதி ஆனதால், 'ஒடுக்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான பரத்வாஜ மகரிஷி, இங்கு ஆசிரமம் அமைத்து இறைதொண்டும், மக்கள் பணியும் செய்துள்ளார். அதன் நினைவாக இங்கே பரத்வாஜர் ஆசிரமம் செயல்படுகிறது.
இங்குள்ள மரகதவல்லி- மாணிக்கவல்லி சமேத மாகலிங்கேசுவரர் கோவில், பரத்வாஜ மகரிஷி வழிபட்ட கோவில் ஆகும். அதோடு ராமரும், பரசுராமரும் கூட இவ்வாலய இறைவனை வழிபட்டதாக சொல்லப்படுகிறது. இந்தக் கோவிலின் மூலவரான மகாலிங்கேசுவரருக்கு எதிரே சிறிய நந்தியும், வலதுபுறம் மரகதவள்ளி -மாணிக்கவள்ளி சன்னிதியும் அமைந்துள்ளது.
மகாலிங்கேசுவரர் கிழக்கு நோக்கியும், மரகதவள்ளி மற்றும் மாணிக்கவள்ளி அம்மன்கள் தெற்கு நோக்கியும் எழுந்தருளி உள்ளனர். கோவில் நுழைவு வாசலின் இருபக்கத்திலும் கணபதி, முருகன் வீற்றிருக்கின்றனர். மூலவர் சன்னிதியில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் ஆதிபைரவர் சன்னிதி உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, மகம் நட்சத்திரம் ஆகிய நாடகளில் இங்கே சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இத்தல இறைவனை மனமுருகி வேண்டிக் கொண்டால் ஆயுள் விருத்தி உண்டாகும். பரத்வாஜ மகரிஷி மற்றும் சித்தர்கள் தவம் செய்த கோவில் என்பதால் தியானம் செய்தவற்கு மிகவும் ஏற்ற இடமாக இது கருதப்படுகிறது. மகாலிங்கேசுவரரை சுற்றி வந்து விளக்கேற்றி வழிபட்டு தியானம் செய்தால், அலைபாயும் மனம் கட்டுப்படும் என்கிறார்கள். இங்குள்ள இறைவனை வழிபட, சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சிறப்பானதாக சொல்லப்படுகிறது. கடன் தொல்லை, திருமண தடை நீங்குவதற்கு பிரதோஷ வழிபாடு கைகொடுக்கிறது. மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியில் ஆதிபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆதிபைரவர் சன்னிதியின் பின்னால் ஒரு துவாரம் உள்ளது. அந்த துவாரத்தின் வழியாக பார்த்தால் மகாலிங்கேசுவரரின் அருட்காட்சி கிடைக்கும். அதன்மூலம் ஒரே நேரத்தில் ஆதிபைரவர், மகாலிங்கேசுவரரை தரிசிக்க முடியும். இங்கு புரட்டாசி மாதம் 20 நாட்களும், மாசி மாதம் 20 நாட்களும் காலையில் மகாலிங்கேசுவரர் மீதும், மாலையில் ஆதிபைரவர் மீதும் சூரிய ஒளி விழுகிறது.
பரத்வாஜ மகரிஷி, மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர். எனவே மகாலிங்கேசுவரர் கோவில், மகம் நட்சத்திரத்துக்கு உரிய சிறப்பான ஆலயமாக கருதப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாதமும் மகம் நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.
மகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்நாளில் வேண்டிக் கொள்வது விசேஷம். நோய் நிவர்த்தி பெற, சிவன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வைத்து வழிபடுகிறார்கள். வீடுகளில் வாஸ்து குறைபாடு உள்ளவர்கள் அந்தக் குறை நீங்கவும் சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
இதுதவிர பஞ்சமி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம், மாத சிவராத்திரி நாட்களில் மகாலிங்கேசுவரருக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்கிறார்கள். மகிரிஷிகள், சித்தர்களுக்கு பிடித்த பொரி உருண்டைகளை படைத்து அடியார்களுக்கு தானமாக வழங்கும் பக்தர்களின் துன்பங்கள் விலகுவதாக ஐதீகம்.
இந்தக் கோவிலின் தலவிருட்சம், திருவாச்சி மரம். இம்மரத்தின் இலைகளை கொண்டும் மகாலிங்கேசுவரருக்கு பூஜைகள் நடத்தப்படுகின்றன. மேலும் திருவாச்சி இலையை விபூதியோடு சேர்த்து கொடுக்கின்றனர். அந்த விபூதி மன அமைதியோடு, நோய்களை குணமாக்கக் கூடியது என்கின்றனர். இங்கே ராமர் உருவாக்கிய பாஸ்கர சரயு தீர்த்தம் இருந்ததாகவும், தற்போது அது மறைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அயோத்தியுடன் சூட்சும ரீதியாக பூமிக்கு அடியில் தொடர்பு உள்ள தலம் இது என்றும் கூறப்படுகிறது. கோவில் வளாகத்தில் பழமையான புற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் அதற்கு பூஜை செய்து வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகி விடுவதாக கூறுகின்றனர். கேது பரிகாரத்திற்கு தகுந்த ஆலயமாகவும் இது திகழ்கிறது.
அமைவிடம்
தவசிமேடை ஒடுக்கம் மகாலிங்கேசுவரர் கோவில், திண்டுக்கல்லில் இருந்து 13 கி.மீ.தூரத்தில் (திண்டுக்கல்-நத்தம் சாலை) அமைந்துள்ளது.
ராமர் பாதம்
ராமர், சீதையை மீட்பதற்கு இலங்கைக்கு செல்லும் வழியில் இத்தலம் வந்துள்ளார். அப்போது யோகநிலையில் இருந்த பரத்வாஜ மகரிஷியை, ராமர் வணங்கினார். பரத்வாஜ மகரிஷி தனது ஆசிரமத்துக்கு வரும் அனைவருக்கும் உணவு கொடுத்து மகிழ்வது வழக்கம். அப்படி இருக்கையில் அவதார புருஷரான ராமருக்கு விருந்தளிக்க அவர் விரும்பினார். அப்படி ராமருக்கு விருந்தளிக்க வேண்டுமானால், பரத்வாஜ மகரிஷி யோக நிலையை கைவிட வேண்டியதிருக்கும். அதை விரும்பாத ராமர், திரும்பி வரும் வழியில் விருந்தை ஏற்பதாக கூறிச் சென்றார். அதன்படி சீதையை மீட்டதும் இந்த வழியாக வந்த ராமருக்கு பரத்வாஜர் விருந்தளித்ததாக கூறப்படுகிறது. ராமரின் வருகையை நினைவுபடுத்தும் வகையில் இங்கே ராமர் பாதம் வைத்து பூஜிக்கப்படுகிறது.
பரத்வாஜ மகரிஷியின் ஜீவசமாதி
பூவுலகில் ஒடுக்க யோக நிலையை (ஜீவசமாதி) பெறுவதற்குரிய, 9 தலங்களில் தவசிமேடையும் ஒன்று என்கின்றனர். பரத்வாஜ மகரிஷி பூமியில் இருந்து 116 அடி மேல் எழும்பிய நிலையில் இருந்து மகாலிங்கேசுவரரை அனுதினமும் வழிபட்டு, கடும் தவம் செய்வார். அதன் அதன்மூலம் தவசக்திகளை பெற்றார். சிவபெருமான் தனது அடியார்களை உயர்வாக போற்றுவார். அடியார்களின் மீது கருணை கொண்டு நேரில் காட்சி தந்து அருள் தருவார். எனவே மகாலிங்கேசுவரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதம் தனது திருமேனி மீது படவேண்டும் என பரத்வாஜ மகரிஷி விரும்பினார். அதன்படி கோவிலுக்கு வெளியே பரத்வாஜ மகரிஷியின் ஜீவ சமாதி 16 அடி நீளத்தில் அமைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய தலை, கால் பகுதியை குறிக்கும் வகையில் 2 பீடங்கள் அமைந்துள்ளன. அதற்கு நடுவே நடந்துதான் பக்தர்கள் கோவிலுக்குச் செல்ல வேண்டும். இதன்மூலம் பரத்வாஜ் மகரிஷியின் ஆசிபெற்று, பக்தர்களின் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை. பரத்வாஜ மகரிஷியைப் போல பல சித்தர்கள். இங்கே தவம் இயற்றி யுள்ளனர். இத்தல இறைவனை வழிபட்ட ஜீவசமாதியும் அடைந்துள்ளனர். அதன்படி கும்பானந்தர், மாரிமுத்து, சூரியமூர்த்தி ஆகிய சித்தர்களின் ஜீவசமாதிகள் இங்கே காணப்படுகின்றன.
கொடி மரம், கோபுர கலசங்கள் இல்லை
இந்தக் கோவிலில் உற்சவ மூர்த்தி இல்லை. கோவிலில் கொடிமரம், கோபுர கலசங்களும் இல்லை. ஆகமவிதி கடைப்பிடிக்கப்படாத காரணத்தால் இங்கே கும்பாபிஷேகம் நடத்தப்படுவது இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆலயத்தில் எங்கும் உண்டியல் இல்லை.
தலைவலி நீக்கும் 'முட்டுக்கல்'
இந்த திருத்தலத்திற்கு பரசுராமர் வந்து தவம் இயற்றியுள்ளார். அவர் தவம் இயற்றிய இடம், ஆதி பைரவர் சன்னிதியில் இருந்து தென்கிழக்கு மூலையில் சுமார் 70 அடி தூரத்தில் இருக்கிறது. அதை அடையாளப்படுத்தும் வகையில் அங்கே ஒரு நினைவு கல் தூண் அமைந்துள்ளது. அதன் அருகில் நெய் தீபம், கற்பூரம், ஊதுபத்தி ஏற்றி மக்கள் வழிபடுகின்றனர். தலைவலியால் அவதிப்படுபவர்கள். இந்த நினைவு கல் தூணை மூன்று முறை சுற்றி வந்து, தலையால் லேசாக முட்டினால், தலைவலி குணமடைவதாக நம்பிக்கை. இதனால் இந்த கல் தூணை, 'முட்டுக்கல்' என்றும் அழைக்கின்றனர்.