வெறுப்பு பேச்சு; மதபோதகர் கைது - போலீஸ் நிலையம் முன் குவிந்த ஆதரவாளர்கள் மீது தடியடி

மதபோதகரின் வெறுப்பு பேச்சு தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.

Update: 2024-02-05 06:24 GMT

மும்பை,

குஜராத் மாநிலம் ஜுனகத் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி இரவு இஸ்லாமிய மத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மதபோதகர் முப்தி சல்மான் மத மோதலை தூண்டும் வகையிலும், வெறுப்பை தூண்டும் வகையிலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சு தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முகமது யூசப், அசிம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஆனால் மதபோதகர் முப்தி சல்மான் மராட்டியம் சென்றார்.

இதனை தொடர்ந்து முப்தி சல்மானை கைது செய்ய குஜராத் போலீசார் மராட்டிய போலீசாரின் உதவியை நாடினர். இதையடுத்து, மும்பையின் கொட்ஹபர் பகுதியில் தங்கியிருந்த முப்தி சல்மானை மராட்டிய போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட முப்தி சல்மான் கொட்ஹபர் போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டபோது சல்மானின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். சல்மானை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், கைது செய்யப்பட்ட மத போதகர் முப்தி சல்மான் போலீஸ் நிலையத்தில் இருந்தே ஆதரவாளர்கள் மத்தியில் மைக் மூலம் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என பேசிய மதபோதகர் சல்மான் பிரச்சினையை சட்டரீதியில் எதிர்கொள்ள தயார் என்றார். மேலும், ஆதரவாளர்கள் கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால், சல்மானின் ஆதரவாளர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே சூழ்ந்து நின்றுகொண்டிருந்தனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் நிலையம் முன் குவிந்திருந்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு கும்பல் கலைக்கப்பட்டது. அதேபோல், கைது செய்யப்பட்ட சல்மானை விசாரணைக்காக போலீசார் குஜராத் அழைத்து செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்