திருப்பதி பிரம்மோற்சவம்.. இன்று முதல் 8 நாட்கள் நடைபெறும் வாகன சேவைகள் விவரம்
பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாள் காலையில் மோகினி அவதார உற்சவமும், இரவு கருட சேவையும் நடைபெறும்.;
திருப்பதி திருமலையில் இன்று (24.9.2025) பிரம்மோற்சவ விழா கோலாகலமாக தொடங்க உள்ளது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை இந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். தினமும் பிரமாண்டமான அளவில் வாகன சேவைகள் நடைபெறும்.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
2-வது நாள்: காலை- சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.
3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்ம வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.
4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.
5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருட சேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாட வீதிகளில் உலா வருவார்.
6-வது நாள்: காலை- ‘சிறிய திருவடி’ என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்க கிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமபிரானாக வலம் வருகிறார். மாலையில் தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன சேவை நடக்கிறது.
7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.
8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.
9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான சுவாமி புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும். பின்னர் கொடியிறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவுபெறும்.