கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்
கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பை புறக்கணித்த 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.;
பெங்களூரு,
கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த மாதம் (செப்டம்பர்) 22-ந்தேதி தொடங்கியது. இந்த பணி வருகிற 18-ந்தேதி வரை நடக்கிறது. பணியில் 1¾ லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் கணக்கெடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்டு இருந்த பல்லாரி மாவட்டம் கம்பளி பி.யூ. கல்லூரி ஆசிரியர் ரவிச்சந்திரா, சண்டூரில் உள்ள வித்யாலயா பள்ளி ஆசிரியர் ராகவேந்திரா ஆகியோர் பணியில் ஈடுபடாமல் புறக்கணித்து வந்துள்ளனர். இதுபற்றி கலெக்டர் நாகேந்திர பிரசாரத்துக்கு புகார்கள் வந்தன.
இதுகுறித்து கலெக்டர் நடத்திய விசாரணையிலும், 2 ஆசிரியர்களும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை செய்யாமல் புறக்கணித்தது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர்கள் ரவிச்சந்திரா, ராகவேந்திரா ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் நாகேந்திர பிரசாத் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.