தினமும் ஒரு பெங்காலி படம் கட்டாயம்
மேற்கு வங்காளத்தில் உள்ள திரையரங்குகளின் அனைத்து ஸ்க்ரீன்களிலும், PRIME TIME நேரத்தில் (மதியம் 3 - இரவு 9) தினமும் குறைந்தபட்சம் ஒரு காட்சி பெங்காலி படத்தைத் திரையிட வேண்டும். பெங்காலி திரைத் துறையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேக வெடிப்பு - ஜம்மு காஷ்மீரில் இந்திய விமானப்படை
ஜம்மு காஷ்மீர், கிஸ்த்வார் மாவட்டம் சிசோட்டி பகுதியில் மேகவெடிப்பால் பெரும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தகுந்த வானிலைக்காக காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு Mi-17 ஹெலிகாப்டர்கள் மற்றும் ஒரு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் (ALH) தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் அதிபர் சுதந்திர தின வாழ்த்து
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பிரான்ஸ் வரும் பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தனியார்மயமாக்கியதே அதிமுகதான் - திருமாவளவன்
தூய்மைப் பணியாளர்களின் பிரச்னையில் ஆரம்பத்தில் இருந்தே விசிக குரல் கொடுத்து வருகிறது. தூய்மைப் பணியை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட முதல்வருக்கு கோரிக்கை இதை வைத்து அரசியல் செய்வது அற்பமானது. 11 மண்டலங்களை தனியார்மயமாக்கியதே அதிமுகதான் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள காந்தியடிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
புதுச்சேரியிலும் கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு
புதுச்சேரியிலும் கவர்னரின் சுதந்திர தின விழா தேநீர் விருந்தை திமுக புறக்கணிக்கிறது என்று திமுக எம்எல்ஏ சிவா கூறியுள்ளார்.
6 ஆண்டுகளில் 633 வன்கொடுமை வழக்குகள் பதிவு
நெல்லை மாவட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 633 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ தகவல் தெரிவித்துள்ளது. உண்மைக்கு புறம்பானது என 45 வன்கொடுமை தடுப்பு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி - திருமாவளவன்
மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ஜிஎஸ்டி வரி குறைப்பு என பிரதமர் மோடி அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது; எங்களை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரியை முழுமையாக கை விட வேண்டும்.
தேர்தலுக்காக செய்தாலும் மக்களுக்கு பயன்தரும் என்பதால் ஜிஎஸ்டி வரி குறைப்பை வரவேற்கிறோம். சுதந்திர தின விழாவில் ஆர்.எஸ்.எஸ்.-யை பிரதமர் பாராட்டி பேசியுள்ளது ஏற்புடையதல்ல” என்று அவர் கூறினார்.
தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளை மறுத்து விட்டு நாடகமாடுகிறார் முதல்-அமைச்சர் - அன்புமணி விமர்சனம்
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 நாள்களுக்கும் மேலாக போராடியத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத. அவர்கள் மீது நள்ளிரவில் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது தூய்மைப் பணியாளர்களின் ஆபத்பாந்தவனாக வேடம் தரித்து நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில்கூட முதல்-அமைச்சர் இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி
தமிழ் சினிமாவில் 90-ஸ்களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை கஸ்தூரி. தற்போது தமிழ். தெலுங்கு மொழி படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் நடைபெற்ற விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் நடிகை கஸ்தூரி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.