பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் புதின் பேச்சுவார்த்தை
உக்ரைன், ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.;
டெல்லி,
உக்ரைன், ரஷியா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ரஷிய அதிபர் புதினும் கடந்த 5ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியுடன் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். தொலைபேசி மூலம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், உக்ரைன்-ரஷியா போர் தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை சந்தித்தது குறித்து பிரதமர் மோடியிடம் ரஷிய அதிபர் புதின் பேசினார்.
அதேவேளை, உக்ரைன் விவகாரத்தில் அமைதியான தீர்வு எட்ட வேண்டும் என புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்:-
என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு அலாஸ்காவில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடனான சந்திப்பு குறித்து பேசிய எனது நண்பரான ரஷிய அதிபர் புதினுக்கு நன்றி. உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீர்வுகாண இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கான அனைத்து முயற்சிகளுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தை, பரிமாற்றம் வரும் நாட்களில் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.