மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. நடுரோட்டில் தொழிலாளி செய்த வெறிச்செயல்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழிலாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2025-06-11 17:16 IST

கலபுரகி,

கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சவுக் போலீஸ் எல்லைக்குட்பட்ட சஹாபஜார் லே-அவுட் கல்லகங்காரகி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது 38). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரூபா(32). இந்த தம்பதிக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது.

இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக ரூபாவின் நடத்தையில் வெங்கடேசுக்கு சந்தேகம் எழுந்தது. இதனால் அடிக்கடி மனைவியிடம் வெங்கடேஷ் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் கோபம் அடைந்த ரூபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசை விட்டு பிரிந்து, குழந்தைகளுடன் சஹாபஜார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சமையலராக வேலை பார்த்து வந்தார். இதை அறிந்த வெங்கடேஷ், தினமும் மனைவி வேலைக்கு செல்லும்போது வழிமறித்து தகராறு செய்து வந்தார்.

ஆனால் ரூபா அதை கண்டு கொள்ளவில்லை. நேற்று காலை வழக்கம்போல ரூபா, ஓட்டலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரூபாவை வழிமறித்த வெங்கடேஷ், கத்தியால் சரமாரியாக மனைவியை குத்திவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ரூபா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்