இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-05-08 07:06 IST


Live Updates
2025-05-08 14:29 GMT

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகர் பிரபு, ராம்குமார் உள்ளிட்ட சிவாஜி குடும்பத்தினர் பங்கேற்றனர்.

2025-05-08 14:27 GMT

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் முகமது இக்பால், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்தார். முகமது இக்பாலுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இந்திய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், பூஞ்ச் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 

2025-05-08 13:26 GMT

பீகார்: பயங்கரவாதத்துக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெற்ற தினமான மே 7ம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிந்தூரி' என பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக இப்பெயரை சூட்டியதாக தெரிவித்துள்ளனர்.

2025-05-08 12:52 GMT

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

பாகிஸ்தானின் பயங்கரவாத தொடர்பை உலகிற்கு இந்தியா அம்பலப்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததை பாகிஸ்தான் தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். பதான்கோட் - பஹல்காம் தாக்குதல்களுக்கு தொடர்பான டி.என்.ஏ மூலம் நிரூபிக்க முயற்சி. ஆதாரங்களை தந்தும்கூட பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கவில்லை.பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான். மசூத் அசார் உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் தஞ்சம் அளித்தது. இந்தியாவால் கொல்லப்பட்டவர்களுக்கு ராணுவ மரியாதை அளித்து இறுதி சடங்கு நடந்துள்ளது. பாகிஸ்தானின் எந்த வழிபாட்டுத்தளங்கள் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை.இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை. பதிலடி மட்டுமே கொடுக்கிறது. மேற்கொண்டு பாகிஸ்தான் தாக்கினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

2025-05-08 11:47 GMT

புதிய போப்பை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நடந்து வருகிறது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடந்தது. எனினும், அது தோல்வி அடைந்த நிலையில், 2-வது நாளாக கார்டினல்கள் கூடிய நிலையில், வாக்கெடுப்பு இன்றும் தோல்வி அடைந்தது. இதனை உணர்த்தும் வகையில், கரும்புகையை வெளியேற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2025-05-08 11:20 GMT

கோவையை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி. இவருடைய கணவர் உயிரிழந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த இவருக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படித்து, சமீபத்தில் நடந்த தேர்வில் கலந்து கொண்டார். அதன் முடிவு வெளியானதில் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் பெற்ற அவர், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

2025-05-08 10:51 GMT

பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரருகே சீன தயாரிப்பு ஏவுகணையை பாகிஸ்தான் வீசியுள்ளது தெரிய வந்துள்ளது. பஞ்சாபில் கிடைத்த ஏவுகணை பாகங்களில் சீன தயாரிப்புக்கான அடையாளம் காணப்பட்டது.

இந்த சூழலில், சீன ஏவுகணை பயன்படுத்தப்பட்டது பற்றி எங்களுக்கு தெரியாது என சீன வெளியுறவு துறை விளக்கம் அளித்துள்ளது.

2025-05-08 10:38 GMT

டெல்லியில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தியாவில் அணு உலை உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கினார்.

2025-05-08 10:33 GMT

பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து உள்ளது. அப்படி வெளியேற முடியாத அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், உளவுத்துறை அமைப்பின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

2025-05-08 10:02 GMT

ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது என இ-மெயிலில் மிரட்டல் விடப்பட்டது. இதனை தொடர்ந்து மக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மெயில் பின்னர் ஆய்வுக்காக காவல் துறை ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெடிகுண்டு செயலிழப்பு குழுவும் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என ராஜஸ்தான் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் நீரஜ் கே. பவன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்