திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.;
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோ பிரதீப் தலைமையிலான காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, உபகார மாதபுரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த திசையன்விளையைச் சேர்ந்த முத்து இசக்கி (வயது 19) மற்றும் கண்ணன்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு தீங்கு விளைவிக்ககூடிய 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முத்து இசக்கி மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்து நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் போதை பழக்கத்தை குறைக்கும் நோக்கத்தோடு, திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது போன்ற போதை பொருள்களை விற்பனை செய்பவர்கள் மீதும், வாங்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வலியுறுத்தியுள்ளார்.