செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம் - எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை கட்சியில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.;

Update:2025-11-07 07:53 IST

சென்னை,

அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் நீக்கப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “52 ஆண்டுகாலம் அ.தி.மு.கவுக்காக உழைத்திருக்கிறேன். தொண்டர்களின் உணர்வைத்தான் வெளிப்படுத்தினேன். என் மீது களங்கம் சுமத்தி நீக்கப்பட்டது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், “அ.தி.மு.கவை முடக்கவோ பலவீனப்படுத்தவோ முற்பட்டால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரைத் தொடர்ந்து கே.ஏ.செங்கோட்டையனும் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதன்படி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி., சத்தியபாமா, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக ஒன்றியச்செயலாளர் சுப்பிரமணியம், குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), முன்னாள் ஒன்றிய தலைவர்கள் மவுதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழக செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட 12 பேர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்