பா.ம.க., தே.மு.தி.க.வை கூட்டணிக்கு இழுக்கும் பா.ஜ.க.. நிர்வாகிகளுடன் மேலிட பொறுப்பாளர் இன்று ஆலோசனை

பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜனதா மேற்கொள்ள இருக்கிறது.;

Update:2025-11-04 07:30 IST

சென்னை,

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன. தற்போதைய நிலையில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது. தி.மு.க. தலைமையில் ஒரு அணி, அதிமுக - பாஜக அணி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருக்கும் பா.ஜனதா தங்களது அணிக்கு கூடுதல் கட்சிகளை அழைத்து வர வியூகம் அமைத்து வருகிறது. அதன்படி, தே.மு.தி.க., பா.ம.க. (அன்புமணி) ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.

இதற்கிடையே, பா.ஜனதா தேசிய துணைத்தலைவரும், தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளருமான பைஜெயந்த் பாண்டா இன்று (செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். ராயப்பேட்டை ஓய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், தொகுதி பொறுப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

தொடர்ந்து, சென்னையில் 2 நாட்கள் தங்கியிருக்கும் பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா பா.ம.க. (அன்புமணி), தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் பேசி கூட்டணியை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்