கல்லூரி மாணவி பலாத்கார சம்பவத்தை கண்டித்து கோவையில் அ.தி.மு.க., த.வெ.க. இன்று ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கோவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதல், பெண்களுக்கு எதிராக பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள், பாலியல் சீண்டல்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச்செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது.
இதன் உச்சமாக, கோவையில், விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 நபர்கள், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கிவிட்டு, மாணவியை தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது. பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோவையில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய தி.மு.க. ஆட்சியை கண்டித்தும் அ.தி.மு.க. ஒருங்கிணைந்த கோவை மாவட்ட மகளிர் அணியின் சார்பில், இன்று காலை 11 மணியளவில், கோவை, செஞ்சிலுவை சங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளர் பா.வளர்மதி தலைமையில் நடைபெறும். கோவை மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் லீலாவதி உண்ணி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலா, கோவை புறநகர் தெற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கண்ணம்மாள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்” என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல் கல்லூரி மாணவி வன்கொடுமையை கண்டித்து இன்று (நவ.04) கோவையில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் கோவை செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே இன்று பகல் 12 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.