நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்

நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான ராமேஸ்வரம் மீனவரை தேடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.;

Update:2025-06-21 15:37 IST

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ராமேஸ்வரம் அருகே மண்டபம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற அனீஸ், மாதவன், ஃபரித், இப்ராஹிம்சா ஆகிய நான்கு மீனவர்கள், கடந்த ஜூன் 18 அன்று நள்ளிரவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது விசைப்படகு கடலில் மூழ்கிய விபத்து மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த விபத்தில் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்த நிலையில், அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களின் உடனடி மீட்பு நடவடிக்கையால் அனீஸ், மாதவன், ஃபரித் ஆகிய மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஆனால், இப்ராஹிம்சா என்ற மீனவர் மாயமானது மிகுந்த கவலையளிக்கும் செய்தியாகும்.

கடந்த இரண்டு நாட்களாக மீனவர் இப்ராஹிமை தேடும் பணி நடைபெற்று வந்தாலும், இதுவரை அவர் கண்டறியப்படவில்லை. மீனவர் இப்ராஹிமின் குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் மீனவர்கள் மத்தியில் இந்தச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, மாயமான மீனவர் இப்ராஹிமை தேடும் பணியை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம். கடலோர காவல் படை, கடற்படை மற்றும் மீனவர் மீட்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இப்ராஹிமை கண்டறிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க, மீனவர்களுக்கு முறையான பயிற்சி, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மேலும், மீனவர்கள் கடலில் தத்தளித்த போது மீட்பு பணிகளில் ஈடுபட்டு, மூன்று மீனவர்களை பத்திரமாக மீட்ட சக மீனவர்களின் துணிச்சலையும், மனிதநேயத்தையும் இந்தத் தருணத்தில் பாராட்டுகிறோம். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீனவர் சமுதாயத்தின் நலனை காக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்