எடப்பாடி பழனிசாமியை 10 ரூபாய் பழனிசாமி என அழைக்கலாமா? - முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
தன்னைப்பற்றி தன் தலைவருக்கும், மக்களுக்கும் தெரியும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.;
கரூர்,
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் மிக கொடுமையானது, யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம். கரூரில் இதுவரை இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடந்ததே இல்லை. எந்த அரசியல் கட்சியின் கூட்டமாக இருந்தாலும் இனி இதுபோன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் கரூர் மக்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றிகள்.
பாஜக-வின் உண்மை கண்டறியும் குழுவினரிடம் கரூரை சேர்ந்த ஒருவரே, ‘கூட்டம் நடத்திய கட்சியினர்தான் தவறு’ என்கிறார். ஆனால் அங்கிருந்த மொழிபெயர்ப்பாளர் வேறொரு கருத்தை திணிக்க அதை சொல்கிறார். கரூர் மட்டுமல்ல, கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் துணை முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆறுதல் சொன்னார்கள்.
இதே பாஜக-வின் உண்மை கண்டறியும் குழு மணிப்பூருக்கோ, கும்பமேளாவிற்கோ, குஜராத் பாலம் இடிந்து விழுந்த இடத்திற்கோ செல்லவில்லை. ஆனால் கரூருக்கு மட்டும் வந்துள்ளார்கள். அவர்களிடம் பாதிக்கப்பட்டவர் கூட்டம் நடத்திய கட்சியை குறை சொல்லும்போது, மொழிபெயர்ப்பாளர் தவறாக அதை சொல்கிறார். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் துணை முதல்-அமைச்சர் நேரடியாக சென்று ஆறுதல் சொன்னார்கள்.
2016-2021 இடையேயான அதிமுக ஆட்சியில் ரூ.10-க்கு கீழ் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக வந்த 7,540 புகார்களிலும், ரூ.10க்கு மேல் கூடுதலாக வசூலிக்கப்பட்டதாக வந்த 8,666 புகார்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2021-க்குப்பிறகு ரூ. 10க்கு கீழ் அதிகமாக வசூலிக்கப்பட்டதற்காக 18,253 புகார்களிலும், ரூ.10 க்கு மேல் வசூலிக்கப்பட்டதற்காக 2,356 புகார்களிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திமுக ஆட்சிக்காலத்தில் வந்த ரூ.10 கூடுதல் தொகை, திமுக-வினருக்கு வருகிறது என்றால். அதிமுக காலத்தில் கிடைத்த தொகை அந்த கட்சியினருக்கு சென்றது என கூறலாம்தானே?.. எனில் இனி எடப்பாடி பழனிசாமியை 10 ரூபாய் பழனிசாமி என அழைக்கலாமா? அதை ஒப்புக்கொள்வாரா அவர்?.. அப்படியெனில் அவர் வழக்கு தாக்கல் செய்யட்டும். அதைவிடுத்து எனக்கு அவர் சான்றிதழ் கொடுக்க வேண்டாம். என்னைப்பற்றி என் தலைவருக்கும் மக்களுக்கும் தெரியும்.
எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், தவறு நடந்துவிட்டால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். திசைதிருப்பி மடைமாற்றம் செய்தால் மக்கள் அதை ஏற்க மாட்டார்கள்
இது கட்டுங்கடாத கூட்டமெல்லாம் இல்லை. கட்டுப்பாடற்ற கூட்டம். அதே இடத்தில் அதிமுக-வினர் 15,000 பேர் இருந்தார்கள். இவர்கள் 25,000 பேர்
அரசியல் கட்சி கூட்டங்களில் இரண்டாம் கட்ட தலைவர்கள், கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி வழிநடத்துவர். இங்கு அது இல்லை. யார் சொல்லியும் யாரும் கேட்கவில்லை.
அவர்கள் (தவெக) கேட்ட லைட் ஹவுஸ் கார்னரில் 5,000 - 7,000 பேர்தான் நிற்கமுடியும். அங்கு கூட்டம் நடந்திருந்தால் மாநகரம் முழுக்கவே போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கும்; அதேபோல உழவர் சந்தையிலும் 3,000 - 5,000 பேர்தான் நிற்கலாம். கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சியினர்தான் முடிவுசெய்து அனுமதி கேட்க வேண்டும். சம்பவம் நடந்த மறுதினம் அங்கு 1,000 முதல் 2,000 செருப்புகள் வரை கிடந்தன. ஆனால் ஒரு காலி தண்ணீர் பாட்டிலாவது இருந்ததா? வந்தவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் கூட சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி ஏற்பாடு செய்யவில்லை. இதை குற்றாச்சாட்டாக சொல்லவில்லை. இனியாவது இப்படி நடக்காமல் அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்
காவல்துறை எடுத்துச் சொல்லியும் அவர்கள் (தவெக-வினர்) கேட்கவில்லை. எங்களிடம் கேட்கும் கேள்விகளை, கரூரில் கூட்டம் நடத்திய கட்சியின் தலைவர், இரண்டாம் கட்ட தலைவர்களிடமும் கேள்வி கேட்க வேண்டும். அல்லது அவர்களாவது விளக்கம் சொல்ல முன்வந்திருக்க வேண்டும். இரண்டுமே நடக்கவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.