எண்ணூரில் வட மாநில தொழிலாளர்கள் சாவு: பணியிட பாதுகாப்பில் சமரசம் கூடாது- இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
எண்ணூர் தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.;
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகில் வயலூரில் அமைந்துள்ள எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பிஎச்இஎல் நிறுவனம் அனல் மின்நிலையம் அமைத்து வருகிறது.
இந்த அனல் மின்நிலையக் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் கூரை சரிந்து விழுந்ததில் 9 பேர் மரணமடைந்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் நடந்த இடத்தை இன்று (1.10.2025) காலையில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகிய எனது தலைமையிலான குழு நேரடியாக பார்வையிட்டு, மரணமடைந்த தொழிலாளர்கள் உடலுக்கு மரியாதை செலுத்தியது. ஸ்டேன்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜார்க்கண்ட் தொழிலாளியை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, விபரங்களை கேட்டறிந்தது.
இரும்புக் கம்பிகளால் யூ வடிவில் அமைக்கப்பட்ட மேற்கூரையில், 45 அடிக்கும் அதிகரமான உயரத்தில் 10 தொழிலாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த போது, கூரை சரிந்து விழுந்ததில் கீழே விழுந்த தொழிலாளர்களில் 9 பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் மரணமடைந்து விட்டனர். 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். ஆபத்தான சூழலில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கு, மத்திய சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதை அரசுக்கு சுட்டிக் காட்டுகிறோம்.
சம்பவம் நடந்த செய்தி அறிந்ததும் மின்சாரத்துறை அமைச்சர், மின்வாரியத் தலைவர் உடனடியாக நேரில் சென்று உதவியதும், உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு மாநில முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 லட்சம், பிரதமர் தலா ரூ.2 லட்சம் என அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கும். எனினும் முதலீடுகளை ஈர்க்க, தொழிலாளர் நலச் சட்டங்களை எளிமையாக்குவது என்ற பெயரால் புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை உறுதி செய்வதிலும், பணியிடப் பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் அரசு சமரசம் செய்துக் கொள்ளக் கூடாது என வலியுறுத்துகிறோம். எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமானப் பணி துணை ஒப்பந்ததாரர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உயிரிழப்புக்கு முதன்மை ஒப்பந்ததாரரும், பெல் நிறுவனமும் பொறுப்பாக்கப்பட வேண்டும்.
தொழிலாளர் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரண நிதியை ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்குவதுடன், அவர்களது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.