திருச்செந்தூரில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருச்செந்தூர் பகுதியில் ஒருவரை 2 பேர் சேர்ந்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கூட்டுசதி செய்து கொலை செய்தனர்.;
கடந்த 2016-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வன்னிமாநகரம் பகுதியைச் சேர்ந்த சேர்மபாண்டி மகன் சிவகுரு(எ) சிவலட்சம் (வயது 32) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்தவர்களான கணேசன் மகன் செந்தில்குமார்(35) மற்றும் ஜெயபாண்டி மகன் வேம்படிதுரை(43) ஆகியோர் சேர்ந்து முன்விரோதம் காரணமாக திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராணி மகாராஜபுரம் அருகே வைத்து கயிற்றால் கழுத்தை இறுக்கி கூட்டுசதி செய்து கொலை செய்தனர். இந்த வழக்கில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் செந்தில்குமார் மற்றும் வேம்படிதுரை ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-II-ல் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று மேற்சொன்ன குற்றவாளிகளில் வேம்படிதுரை உயிரிழந்த நிலையில் செந்தில்குமாருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், கூட்டுசதி குற்றத்திற்காக மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆடிவேல் மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சேவியர் ஞானப்பிரகாசம், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் பரணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 24 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.