நெல்லையில் வாலிபர் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது
ராதாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பேரை காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார்.;
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், நக்கனேரியில் இருந்து கோலியான்குளம் செல்லும் சாலையில் நேற்று முன்தினம் (6.8.2025) காலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தமிழரசன் (வயது 19) மற்றும் பின்னால் அமர்ந்திருந்த பிரபுதாஸ்(25) ஆகியோர் காயங்களுடன் ராதாபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பிரபுதாஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தமிழரசன் ராதாபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இச்சம்பவத்தையடுத்து, பிரபுதாஸின் ஊரைச் சேர்த்த சில நபர்கள் ராதாபுரம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த ஏடிஎஸ்பி மற்றும் வள்ளியூர் உட்கோட்ட டிஎஸ்பி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசி சமாதானம் செய்து மறியலை கைவிட செய்தனர்.
இறந்தவரின் உடலில் இருந்த காயங்கள் சந்தேகங்களை ஏற்படுத்தியதால் சந்தேக மரண வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் தொடரச்சியாக, பிரேத கூராய்வு செய்யப்பட்டு, பிரபுதாஸ் உடலில் ஆயுதங்களால் காயங்கள் ஏற்படுத்தப்பட்ட விவரம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவுப்படி, வள்ளியூர் உட்கோட்ட டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கூடங்குளம், சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த வினோத்(42), லிங்கசாமி(22), மகராஜன்(23) மற்றும் திசையன்விளையைச் சேர்ந்த அருண்குமார்(21) ஆகியோர் திட்டமிட்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கத்தில், காரை மோதச் செய்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
மேலும் இறந்த பிரபுதாஸ் கோயம்புத்தூதில் பணியாற்றியபோது ஏற்பட்ட ஒரு சம்பவத்தில், அவருடைய செயலால் ஒரு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இக்கொலையின் பின்னணியில் உள்ள விபரம் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கை துரிதமாக விசாரித்து குற்றவாளிகளை கைது செய்து உண்மையை வெளிக்கொண்டுவந்த, வள்ளியூர் உட்கோட்ட டிஎஸ்பி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, மேற்சொன்ன சாலை விபத்து போன்று நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலையினை சுமார் 30 மணி நேரத்தில் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளை கைது செய்து, உறுதியான காவல் பணியில் எந்தக் குற்றமும் மறைக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இது போன்ற குற்றங்கள் நடைபெறும்போது, திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தீர்மானமாக புலன் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
சமீபத்தில் பழவூர் காவல் நிலைய எல்லையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக கிடந்த வழக்கிலும், சிசிடிவி பதிவுகளை சுமார் 200 கி.மீ. தூரம் வரை ஆய்வு செய்து, குற்றவாளியும், இறந்தவரின் அடையாளமும் கண்டறியப்பட்டது.
அதேபோல வள்ளியூரில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரின் மரணம் தொடர்பாகவும், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, ஆதாய கொலை என்று கண்டறியப்பட்டு விரைவில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். திருடிய நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டது.
இதுபோன்று மாவட்டத்தில் நிகழும் குற்ற சம்பவங்களில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பாரபட்சமின்றி சட்டத்தின்படி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சில நபர்கள் மற்றும் அமைப்பினர், முழுமையான விசாரணை முடிவுகள் தெரியாமலேயே, தவறான கருத்துகள் கூறுவதோடு மட்டுமல்லாமல், சாலை மறியல், சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்புவது, பிரேத கூறாய்வு முடித்து சடலத்தினை வாங்காமல், கோரிக்கைகள் ஏதேனும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, காவல்துறையின் விசாரணையில் இடையூறு விளைவிக்கும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இதனால் காவல்துறையினர் வழக்கில் முழுமையாக தங்களை ஈடுபடுத்த முடியாமல், போராட்டங்களை சரி செய்வதற்கு தங்களது கவனத்தினை திசை திருப்பும் சூழல் இருந்து வருகிறது. இது போன்ற செயல்கள் குற்றவாளிகளை கைது செய்யும் நேரத்தினை நீட்டிக்கிறது. காவல்துறையின் கடமை மற்றும் பொறுப்பு குற்றங்களை கண்டறிந்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் கொண்டு செல்லும் பணியாகும். ஆகவே பொதுமக்கள், நியாயமான விசாரணைகளை நடத்த காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.