இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025

Update:2025-07-01 10:01 IST
Live Updates - Page 2
2025-07-01 11:45 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குற்றவாளி என நிரூபணமானதுடன், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் எம்.எல்.ரவி அளித்த அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஞானசேகரன் யார் யாரிடம் போனில் பேசினார் என்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாக சொன்ன அண்ணாமலை, அவற்றை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் அளிக்கவில்லை என்றும் அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறிய கோர்ட்டு, அரசியல்வாதிகள் கூறும் கருத்துகளுக்கு கோர்ட்டு பதிலளிக்க வேண்டுமா? இதுபோன்ற கருத்துகளை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டுமானால் தினமும் நூறு வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டியது வரும் என தெரிவித்துள்ளது.

2025-07-01 11:33 GMT

தமிழக அரசுக்கும், கவர்னர் கவர்னர் ஆர்.என். ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 26-ந் தேதி டெல்லிக்கு ஒரு நாள் பயணமாக சென்று வந்த கவர்னர் ஆர்.என். ரவி, தற்போது 4 நாள் பயணமாக மீண்டும் டெல்லி சென்றுள்ளார்.

இன்று காலை 8.55 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். ஒரே வாரத்தில், 2-வது முறையாக கவர்னர் டெல்லி சென்றது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் பயணத்தில் அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது.

அப்போது, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து அவர் தெரிவிப்பார் என தெரிகிறது. அதனை தொடர்ந்து வரும் 4-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கவர்னர் ஆர்.என். ரவி டெல்லியில் இருந்து சென்னை திரும்ப இருக்கிறார்.

2025-07-01 10:47 GMT

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்று வருகிறது. திருப்புவனம் நீதிமன்ற நடுவர் வெங்கடாபதி பிரசாத், கோவில் உதவி ஆணையர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது, அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை இடைக்கால அறிக்கையை மருத்துவ கல்லூரி டீன் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், "இளைஞர் உடலில் 44 காயங்கள் உள்ளன. மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்துள்ளது. இளைஞரின் உடலில் எந்த உறுப்பையும் விட்டு வைக்கவில்லை. அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

2025-07-01 10:37 GMT

தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 42 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் பலர் ஒடிசா, பீகார், ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆலை நிர்வாகத்திடம் பேசி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு பெற்று தர உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.

ரூ.1 கோடி வழங்குவதற்காக அரசு மற்றும் நிறுவனம் தரப்பில் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். தீவிர காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து பணிக்கு திரும்ப கூடிய அளவுக்கு காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று அரசு தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2025-07-01 09:52 GMT

இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு பற்றிய விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் தொடங்கியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் அருள் சுந்தரேஷ்குமார் தாக்கல் செய்துள்ளார்.

2025-07-01 09:00 GMT

சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு

ஆட்டோவில் வைத்திருந்த ஆவணம், பணம் உள்ளிட்டவற்றை வைத்திருந்த பைகள் திருடப்பட்டு உள்ளன. இதுபற்றி புகார் அளிக்கப்பட்டது. இன்று மட்டும் 3 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்தடுத்து திருட்டு பற்றிய சம்பவங்கள் வெளிவந்துள்ளன.

2025-07-01 08:29 GMT

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய வழக்கு - கருத்து தெரிவித்த நீதிபதிகள்


திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி தொடர்ந்த வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், “திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு 7ஆம் தேதி நடைபெற உள்ளதால் தற்போதைய நிலையில் சுப்ரீம்கோர்ட்டு தலையிடுவது நல்லதல்ல.. இந்த நேரத்தில் தான் நடத்த வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் நீங்கள்தான் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்துள்ளீர்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

2025-07-01 08:23 GMT

எலான் மஸ்க் கடையை காலி செய்ய வேண்டியிருக்கும் - டொனால்டு டிரம்ப்


இ.வி. வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்யும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த டெஸ்லா நிறுவனர் எலான்மஸ்கிற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென் ஆப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்” என்று காட்டமாக தெரிவித்தார்.

2025-07-01 07:47 GMT

கோவில் காவலாளி மரண வழக்கு: தகவல் தெரிந்த உடன் நடவடிக்கை எடுத்துள்ளோம் - மு.க.ஸ்டாலின்


மடப்புரம் கோவில் காவலாளி போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “வழக்கில் தகவல் தெரிந்தவுடன் நடவடிக்கை எடுத்துள்ளோம். கைது செய்துள்ளோம்; மேல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்