தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் சூழல் உள்ளது - மு.க.ஸ்டாலின்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று முதல் 45 நாட்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க உள்ளோம். தேர்தல் தேதி அறிவித்த பிறகு தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். தி.மு.க கூட்டணியில் புதிய கட்சிகள் இணையும் சூழல் உள்ளது” என்று அவர் கூறினார்.
இளைஞர் லாக்-அப் மரணம்: அஜித்தை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்மால் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
ஆதார் மூலம் தட்கல் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை - இன்று முதல் அமல்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரெயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரெயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவு செய்து வருகின்றனர். பயணத்துக்கு, ஒருநாள் முன்பு டிக்கெட் எடுக்கும் முறை, 'தட்கல்' எனப்படுகிறது. பெரும்பாலும், இந்த தட்கல் டிக்கெட் கிடைப்பது மிகவும் அரிது. ஆனால், பயண ஏஜண்டுகளுக்கு மட்டும் எளிதாகக் கிடைக்கிறது.
இந்த நிலையில் இன்று முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது.
லாக்-அப் மரணம்: தலைமைக்காவலர் விசாரித்ததே விதிமீறல்.. பொதுநலன் வழக்கு மனுதாரர் தரப்பு வாதம்
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட பொதுநலன் வழக்கு மனுதாரர் கார்த்திக் தரப்பில் வாதிடப்பட்டது.
இதன்படி, “சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் கண்ணன், மானாமதுரை டிஎஸ்பி-யின் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர். இவர் அங்கிருந்து, திருப்புவனம் வந்து விசாரித்தது விதிமீறுவதாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் அஜித்குமார் மரணம்.. சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
போலீசார் விசாரணையின்போது திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளநிலையில், சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்சுக்கு சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விசாரணையின்போது இளைஞர் மரணம்.. நீதிபதிகளிடம் ஆதாரங்கள் சமர்ப்பிப்பு
போலீசார் விசாரணையின்போது திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு தொடர்பான வீடியோவை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகளிடம் சமர்ப்பித்து வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார்.
மேலும் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருவண்ணாமலையில் ஒரே நாளில் இருவர் கொலை - பொதுமக்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலையில் ஒரே நாளில் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காந்திநகர் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர் ராமு என்பவரும், அண்ணாநகர் பகுதியில் சுனில் என்ற நபரும் கத்தியால் குத்திக்கொல்லப்பட்டனர்.
சுனில் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த கோட்டை முத்து என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் ராம் கொலை வழக்கில் 3-க்கும் மேற்பட்டோரை கைது செய்து திருவண்ணாமலை கிழக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம் இளைஞர் மரணம்: கைது செய்யப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் தர்ணா
போலீசார் விசாரணையின்போது திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 5 போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் கனரக வாகனங்களுக்கு தடை
கொடைக்கானல் மலைப் பகுதியில் இன்று முதல் ஜேசிபி, போர்வெல், உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைய மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெற்றி நிச்சயம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 18 - 35 வயதுள்ள, படித்த, வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10, 12ம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தில் சேர Skill Wallet என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.