தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசு, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை இல்லாமல் இருந்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
இன்று மாலை வெளியாகும் "கூலி" படத்தின் 'மோனிகா' பாடல்
கூலி படத்தின் முதல் பாடலான 'சிக்கிட்டு' என்ற முதல்பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலின் அறிவிப்பினை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள 'மோனிகா' என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
கோவை குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் கைது - டிஜிபி விளக்கம்
தமிழ்நாடு டிஜிபி ஷங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க ஆபரேஷன் அறம் நடைபெற்றது. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி
ரிதன்யா தற்கொலை வழக்கில் கைதான மாமியார் சித்ராதேவியின் ஜாமீன் மனுவை திருப்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டநிலையில், தற்போது அவரது மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவீரர் அழகுமுத்துக் கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள்ள எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது:-
வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்கள். தாய் நிலத்தின் உரிமை காக்க. அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக் கோன் அவர்களின் பிறந்த நாளில் அவரது தீரத்தையும் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழர் விரோத போக்கைத் துளியும் நியாய உணர்வு இல்லாமல் கையாண்டு வரும் மத்திய பாஜக அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள். கீழடி விவகாரத்தில் தொடர்ந்து தமிழர்களின் தொன்மையை மூடிமறைக்க உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்.
கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தமிழ்நாட்டு மக்கள் வரும் சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் தக்க பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று. தமிழில் அருச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர்:
சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளீனரின் செயலால் நடந்த கொடூரம் - 2 பேர் மீது சரக்கு லாரி ஏறி இறங்கிய கொடூரம்
சோழவரம் அருகே ஒரக்காடு கிராமத்தில் தனியார் கூரியர் நிறுவனத்திற்கு லோடு இறக்க வந்த சரக்கு வாகனம் மோதி இருவர் உயிரிழந்தனர்.
வாகனத்தை நிறுத்திவிட்டு காவலாளியிடம் பேசிய போது கிளீனர் பின்னால் இயக்கியதால் ஓட்டுநர் கருப்பசாமி (24), காவலாளி பிரபு (50) ஆகிய இருவர் பரிதாபமாக பலியாகினர்.
இதனைத்தொடர்ந்து கிளீனர் ரூபனை (18) கைது செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 28,000 கன அடியாக குறைவு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து நேற்று நிலவரப்படி வினாடிக்கு 32,000 கன அடியாக இருந்தது.
இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், பரிசல் சவாரி செய்வதற்கும், அருவிகளில் குளிக்கவும் 17 நாட்களாக தடை நீடிக்கிறது.
குஜராத் விமான விபத்து: இன்று அறிக்கை விவரம் வெளியாக வாய்ப்பு
275 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை விவரம் இன்று (ஜூலை11) வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியிடப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
இதன்மூலம் விமான விபத்துக்கான காரணம் என்ன என்ற விவரம் வெளியாக வாய்ப்புள்ளது. முதல்முறையாக கறுப்பு பெட்டியில் உள்ள தரவுகள் இந்தியாவிலேயே பதிவிறக்கம் செய்யப்பட்டு ஆய்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.