ஒடிசாவில் நீதிக்காக போராடிய மாணவியின் மரணம்.. பாஜகவின் நேரடிக் கொலை - ராகுல் காந்தி கடும் தாக்கு
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பாஜக அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை.
தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை துணிச்சலாக பேசினார் அந்த மாணவி. ஆனால் நீதி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக அவர் அச்சுறுத்தப்பட்டார். துன்புறுத்தப்பட்டார். மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஓரணியில் இருந்தால், டெல்லி அணியின் காவி திட்டம் பலிக்காது: மு.க.ஸ்டாலின் பேச்சு
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.
இதன் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியதாவது;
"மக்கள் வசிக்கும் பகுதிக்கு நேரடியாக சென்று சேவையை வழங்கவே உங்களுடன் ஸ்டாலின் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். தகுதி இருந்தும் உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் முகாம்களில் வந்து விண்ணப்பித்தால் போதும். முகாம்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் கிடைக்கும்
இவ்வாறு கூறினார்.
ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்: அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை திருக்கோவிலூர் இடையிலான சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியை நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடா செல்லும் ரெயில் கடக்க முற்பட்டது. அப்போது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை லோகோ பைலட் கண்டார்.
திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய விசிக உறுதுணையாக இருக்கும் - திருமாவளவன்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளைய பெருமாளின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திராவிட மாடல் அரசு மீண்டும் அமைய விசிக உறுதுணையாக இருக்கும்.. திமுக கூட்டணிக்கு விழும் கொத்து கொத்தான வாக்குகளில் 25 சதவீதம் விசிக வாக்குகளாக இருக்கும்” என்று கூறினார்.
கொடிக்கம்பம் வழக்கு - சென்னை ஐகோர்ட்டில் சிபிஎம் அவசர முறையீடு
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர முறையீடு செய்துள்ளது.
இதன்படி நீதிமன்ற உத்தரவை மீறி வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை ஐகோர்ட்டு ஒப்புதல் அளித்துள்ளது.
திருவள்ளூர் ரெயில் தீ விபத்து - விசாரணை தொடக்கம்
திருவள்ளூர் டீசல் டேங்கர் ரெயில் கவிழ்ந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் விசாரணையை தொடங்கியது.
இதன்படி லோகோ பைலட், உதவி லோகோ பைலட், ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 16 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு
சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால், அதற்கு அனுமதி அளிக்குமாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால் புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் மனு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாஸ்போர்ட் மாயமாகி விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை முதல் பயன்பாட்டுக்கு வரும் திருச்சி பஞ்சப்பூர் பஸ் முனையம்
பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம் பஸ்கள் வழக்கம் போல் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் நிறுவனத்தின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு
உலகின் முன்னணி மின்வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலும் தனது விற்பனையை தொடங்க உள்ளது. இதற்காக மும்பையில் உள்ள தனது முதல் ஷோரூமை டெஸ்லா நிறுவனம் திறந்துள்ளது.
மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்தார். மும்பை குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4,000 சதுர அடியில் டெஸ்லா நிறுவனத்தின் மையம் அமைக்கப்பட்டுள்ளது