தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை
தமிழ்நாடு முழுவதும் இனி ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதன்படி தினமும் விற்பனை விலையை அறிவிக்கும் வகையில் புதிய இணையதளம் உருவாக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.
நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் உள்ள Code word தகவல் பரிமாற்றம் - போலீஸ் விசாரணை
நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே நண்பர்கள் வட்டாரத்தில் ஒரு சிலரிடம் Code word-ல் கிருஷ்ணா பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த Code word, போதைப்பொருள் தொடர்புடையதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் வடக்கு ஒடிசா அதனை ஒட்டிய மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வழியே நகர கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினரை கொலை செய்யும் அளவுக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? - எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள திமுக பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூருக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருப்பத்தூரில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. குமாரமங்கலத்தில் ரூ.6 கோடியில் துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
2. ஆம்பூர் பகுதியில் புதிய நூலக கட்டிடம் அமைக்கப்படும்.
3. 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நல்ல குண்டா பகுதியில் ரூ.200 கோடி மதிப்பில் சிப்காட் அமைக்கப்படும்.
4. ஆலங்காயம் ஊராட்சி நெக்னாமலை பகுதியில் ரூ.30 கோடி மதிப்பில் 7 கிமீ-க்கு சாலை அமைக்கப்படும்.
5. திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடத்தில் ரூ.18 கோடி மதிப்பில் அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்
சென்னையில் நாளை முதல் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம்
சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சாகித்திய அகாடமி, தமிழ்த் துறை, ஜவஹர்லால் நேரு பல்கலை. இணைந்து இந்த கருத்தரங்கை நடத்துகிறது
இந்தியா-இங்கிலாந்து முதல் போட்டி நிறைவு: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி.
4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கான புள்ளி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் இந்த சுழற்சியில் முதல் போட்டியை இந்தியாவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து 100 சதவீத புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது.
`ஒரே நாடு, ஒரே தேர்தல்' - நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்
`ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறுகிறது
டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் சட்ட வல்லுநர்கள், முன்னாள் அதிகாரிகளின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் பாணியில் கடைசி வரை நான்தான் தலைவர் - ராமதாஸ்
தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் விரும்பியது போல், என்னால் தொடங்கப்பட்ட கட்சி பாமக. 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்த இந்த கட்சிக்கு நான் தான் தலைவர். நிர்வாகிகளுக்கு நான் வழங்கியபொறுப்பு தான் நிரந்தர பொறுப்பு. போஸ்டர் கிழிப்பு சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எனக்கு அழைப்பு இல்லை. யாராக இருந்தாலும் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது
தேவைப்படும் நேரத்தில் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு செய்வோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும். என் மனசும், மனசாட்சியும் சொன்னதால்... நான் மூச்சு இருக்கும் வரை தலைவராக இருப்பேன்.
கலைஞர் கருணாநிதி பாணியில் பாமகவின் தலைவராக இறுதி மூச்சு வரை நான்தான்செயல்படுவேன். ஸ்டாலின் பாணியில் அன்புமணி செயல் தலைவராக செயல்பட வேண்டும். கலைஞர் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் தரப்பில் இருந்து ஒரு முணுமுணுப்பு கூட வரவில்லை.
செயல் தலைவர் என்பது சிறந்த பொறுப்பு அதை அன்புமணி ஏற்க மாட்டேன் என்கிறார். எனது 60-வது திருமண நாள் நிகழ்ச்சிக்கு அன்புமணி வராதது வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போதைப்பொருள் பயன்படுத்திய புகார்: நடிகர் கிருஷ்ணாவின் வீட்டில் போலீசார் சோதனை
போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவின் சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து நடிகர் கிருஷ்ணா பயன்படுத்தும் மருந்துகளை போலீசார் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கிருஷ்ணாவின் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வு செய்து போதைப்பொருள் குறித்து கருத்துகளை பரிமாறியுள்ளாரா என்றும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.