தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம் என்ன..?
ஆபரண தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் ரூ.72,560க்கும், ஒரு கிராம் ரூ.9,070க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நீக்கம்..?
2-வது போட்டிக்கான இந்திய அணியிலிருந்து இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பர்மிங்காம் சென்ற இந்திய அணியுடன் அவர் பயணிக்கவில்லை. இதனால் அவர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் நடிக்கும் சூரி
பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் சூரி நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தினை லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்க உள்ளார். இவர் மோகன்லால் நடிப்பில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற படத்தினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் கழிவுகளால் மஸ்கிற்கு சிக்கல்; வழக்கு தொடர மெக்சிகோ அரசு முடிவு
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஷீன்பாம், உண்மையில் குப்பைகள் சேர்ந்துள்ளன. தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு ஏற்ப, எந்த வகையிலான சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டு உள்ளன என பரிசீலனை செய்யப்படும் என்றார்.
வார விடுமுறையை முன்னிட்டு 945 சிறப்பு பஸ்கள் அறிவிப்பு
வார விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலின்றி சொந்த ஊர் சென்று வர ஏதுவாக அரசு சிறப்பு பஸ்களை அறிவித்து வருகிறது.
அதன்படி, ஜூன் 27, 28, 29 ஆகிய தேதிகளில் முக்கிய நகரங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு ஆகிய இடங்களில் கூடுதலாக வெளி மாவட்ட பஸ்கள் இயங்கும்.
www.tnstc.in இணையதளம், TNSTC செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் 3 பேரும் சினிமா பாடலுக்கு ஆபாச நடனம் ஆடியது மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது விபூதி அடித்த வீடியோ வெளியான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவில் பணியாளர் கார்த்திக் மீதும் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது விரைவில் நடவடிக்கை பாயும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் கனமழையை தொடர்ந்து இடுக்கி, வயநாடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கேரளாவில் கனமழை காரணமாக பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், ஏர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் மேக வெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு
இமாச்சலப் பிரதேசத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.பார்வதி நதி ஆபத்தான அளவில் நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்தப் பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது
மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை
அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப் பகுதியில் நேற்று பெய்த மழையின் காரணமாக மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
வினாடிக்கு 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கும், பரிசல் சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.