பாதுகாப்பு வாகனங்கள் மீது லாரி மோதியது.. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய தேஜஸ்வி
ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் இன்று காலை வைஷாலி மாவட்டத்தில் காரில் சென்றுகொண்டிருந்தார். அவருடன் போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் வாகனங்களில் அணிவகுத்துச் சென்றனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி, கான்வாயில் புகுந்து பாதுகாப்பு வாகனங்கள் மீது மோதியது. இதில் 2 வாகனங்கள் சேதமடைந்தன. 3 பேர் காயமடைந்தனர். தேஜஸ்வி சென்ற கார் மீது லாரி மோதவில்லை. இதனால் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள்: ஐகோர்ட்டு நீதிபதி காட்டம்
கோவை குவாரி மோசடி வழக்கில் குவாரி உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரதசக்கரவர்த்தி, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கிறார்கள், என வேதனை தெரிவித்தார்.
குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு, மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளிக்கிறார்கள். எனவே, குவாரி மோசடியில் அதிகாரிகளின் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
உக்ரைனின் கிழக்கு நகரமான கார்கீவை குறிவைத்து இன்று ரஷிய படைகள் தாக்குதல் நடத்தின. டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர்.
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ஷ்லோக் திரிபாதி என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த வாலிபர் மோசடி பேர்வழி என்றும், அடிக்கடி தனது அடையாளத்தை மாற்றிக் கொள்வார் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'தக் லைப்' படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
பக்ரீத் பண்டிகையையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி;
”பக்ரீத் பண்டிகைக்கு வாழ்த்துக்கள். இந்த சந்தர்ப்பம் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கட்டும், நமது சமூகத்தில் அமைதியின் கட்டமைப்பை வலுப்படுத்தட்டும். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு கிடைக்க வாழ்த்துகிறேன்.”என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் ஜுன் 10, 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்கள் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு
-வானிலை ஆய்வு மையம் தகவல்