சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பந்துவீசுகிறது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு: நாடாளுமன்றம் நாளை கூடுகிறது
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை தொடங்க உள்ளது. வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு, மணிப்பூர் வன்முறை மற்றும் அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகத்தை இந்தியா கையாண்ட விதம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் அவை நடவடிக்கைகளில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
அதேபோல் மத்திய அரசை பொருத்தவரை மானியக் கோரிக்கைகளுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுதல், பட்ஜெட் நடைமுறைகளை நிறைவு செய்தல், மணிப்பூர் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுதல் மற்றும் வக்ஃப் திருத்த மசோதாவை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான நாடாளுமன்ற ஒப்புதலை கோரும் சட்டப்பூர்வ தீர்மானத்தை உள்துறை மந்திரி அமித் ஷா முன்மொழிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிப்பூர் மாநிலத்திற்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார்.
குஜராத்தின் சபர்காந்தா மாவட்டம், போஷினா தாலுகாவில் இன்று அதிகாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குஜராத்-ராஜஸ்தான் எல்லை அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.
ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன 3 பேர் மர்ம மரணம்: பயங்கரவாத செயலா?
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டம் மல்ஹார் அருகே கடந்த 5-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வருண் சிங் (வயது 15), அவரது மாமா யோகேஷ் சிங் (வயது 32), தாய் மாமா தர்ஷன் சிங் (வயது 40) ஆகிய 3 பேர் காணாமல் போனார்கள். அவர்களின் இல்லத் திருமண ஊர்வலத்தில் பங்கேற்ற சிறிது நேரத்தில் அவர்களை காணவில்லை. மூன்று நாட்களுக்கு பிறகு அவர்களின் உடல்கள், ஊரைவிட்டு வெகு தொலைவில் உள்ள நீர்வீழ்ச்சி அருகே கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. உடல்களில் எந்த காயங்களும் இல்லை. எனினும், இதன் பின்னணியில் பயங்கரவாத செயல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சினோ ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு வாழும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்;-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்;-
* நிதிப்பகிர்வு, மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களில் முதலமைச்சரின் அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக துணை நின்று, நாடாளுமன்றத்திலும் இவற்றை முன்வைத்து போராடி வெற்றியை ஈட்ட தீர்மானம்
* மறுசீரமைப்பினால் தொகுதிகளை இழக்கும் மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து களம் காண தீர்மானம்
* தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என தீர்மானம்
பாகிஸ்தானில் பிரபல மத அறிஞர் முப்தி ஷா மிர், மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியபோது, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறு வந்த மகா கும்பமேளா நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபிறகும், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எனவே, மக்களின் வசதிக்காக சில ஏற்பாடுகள் ஆண்டு முழுவதும் அப்படியே வைத்திருக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
துணை ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு (வயது 73) நேற்று நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போது அவரது உடநிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.