தமிழகத்தில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்
அரபிக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வருகிற 25, 26 ஆகிய 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிகப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளது.
எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் தாமோதரன் அளித்த மனுவில், பணத்தை அபகரிக்கவும், ஜூலை 30-ந் தேதிக்குள் கோவையில் வெடிகுண்டு வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எஸ்.பி.வேலுமணிக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய புளியம்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். டிராக்டரில் கொண்டு செல்லப்பட்ட சாமி சிலை தீப்பிடித்த போது தீயை அணைக்க முற்பட்ட விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மின் வாரிய அதிகாரிகளின் அலட்சியமே விவசாயி உயிரிழப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு ராகுல் காந்தி நாளை பயணம்
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை பயணம் மேற்கொள்கிறார். பாகிஸ்தான் ராணுவ டிரோன் தாக்குதலில் இறந்தோர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். ஏப்.25-ல் ஸ்ரீநகர் சென்ற ராகுல்காந்தி, பஹல்காம் தாக்குதலில் இறந்தோருக்கு ஆறுதல் கூறியிருந்தார்.
நகைக்கடன் புதிய விதிகளை திரும்பப்பெறுக: ரிசர்வ் வங்கிக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
தங்க நகைக்கடனுக்கான புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற வேண்டும். கடன்பெறும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் புதிய நிபந்தனைகளால் கடுமையாக பாதிக்கப்படுவர். 80 சதவீதம் ஏழை, எளிய மக்கள் அவசர தேவைக்காக நகைகளை வங்கிகளில் அடமானம் வைப்பது பாதிக்கப்படும். தனியார் நகைக்கடைகளில் வாங்கும் தங்க காசுகளுக்கும் தங்க நகைக்கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
திமுகவை கண்டித்து, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கும்பகோணத்தில் கடை ஊழியர் பாலியல் வன்கொடுமை புகாரில் நடவடிக்கை இல்லை என கூறி கண்டன ஆர்ப்பட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி யாருடன்? பிரேமலதா விஜயகாந்த் பதில்
2026இல் மக்கள் நல்ல தீர்ப்பை கொடுப்பார்கள் என நம்புகிறேன். கூட்டணி அமைத்த பிறகு சலசலப்பு ஏற்பட்டால் பிரிவதற்கே வாய்ப்புள்ளது. கூட்டணி அமைத்தபின் ஆட்சி அமைக்கும் நிலைப்பாட்டைதான் நயினார் கூறியுள்ளார் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தவெக-வின் சின்னம் என்ன? விஜய் தீவிர ஆலோசனை
தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னத்தை தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்களிடம் எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சிகள் தேர்வு செய்ய 190 சின்னங்களை பட்டியலிட்டு வைத்துள்ளது தேர்தல் ஆணையம். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் வரும் நவ. 5 முதல் 2026 மே வரை கட்சிகள் சின்னங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சாமித் தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். திருவிழாவின் 11வது நாளான வரும் ஜூன் 2ம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.71,520க்கும், கிராம் ரூ.8,940க்கும் விற்பனை ஆகிறது.