இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 26-04-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
விடைபெற்றார் போப் பிரான்சிஸ்: இறுதி அஞ்சலியில் உலகத் தலைவர்கள் பங்கேற்பு
வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயாராகி இருந்தது. போப் ஆண்டவரின் உடல் புனித பீட்டர் பேராலயத்தில் இறுதிச்சடங்குகளை முடித்து புனித மேரி பசிலிக்காவுக்கு கொண்டு வந்ததும், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோரை கொண்ட ஒரு குழுவினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு
இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
'என்னை இங்கேயே இருக்க விடுங்கள்' - இந்திய காதலனை மணந்த பாகிஸ்தான் பெண் வேண்டுகோள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். தற்போது நான் இந்தியாவின் மருமகள். பாகிஸ்தானுக்கு செல்ல நான் விரும்பவில்லை. என்னை இங்கேயே இருக்க அனுமதிக்குமாறு பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க” - தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கு கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் கோவையில் தொடங்கி உள்ளது.
ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த தவெக வாக்குச்சாவடி முகவர்களுக்கான இந்த கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.
கருத்தரங்கு கூட்டத்தில் தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்தார், அப்போது, “Friends, அங்க நிறைய Wire போகுது... பாதுகாப்புக்காக சொல்றேன், கொஞ்சம் பின்னாடி வந்துடுங்க. இன்னும் 2, 3 மணி நேரம் இங்க உங்ககூடதான் இருக்கப்போறேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க” என்று கூறினார்.
ஈரான்: பயங்கர சத்தத்துடன் கண்டெய்னர் வெடித்து விபத்து - 400க்கும் மேற்பட்டோர் படுகாயம்
ஈரான் பந்தார் அப்பாஸ் துறைமுகம் அருகே உள்ள கண்டெயர்னர் யார்டில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் வெடி விபத்தின் அதிர்வலை உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது
போப் பிரான்சிஸ் உடலுக்கு ரோம் மக்கள் பிரியாவிடை
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 23-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்த சூழலில் இன்று (சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது. இதற்காக சிறப்பு வழிபாடு (திருப்பலி) நடத்தப்பட்டது. பின்னர் வாடிகனுக்கு வெளியே உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்கா பேராலயத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது விருப்பப்படியே அவருக்கு மிகவும் பிடித்தமான புனித மேரி பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது.
இதற்காக புனித மேரி பேராலயத்தில் அவர் அடிக்கடி பிரார்த்தனை செய்யும் புனித மேரியின் படத்துக்கு அருகே எளிய முறையிலான கல்லறை ஒன்று தயாராகி உள்ளது.
இந்நிலையில் போப் பிரான்சிஸ் உடலுக்கு ரோம் மக்கள் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.
7 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
இன்று இரவு 7 மணி வரை தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தேனி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் பதற்றம்: தேசப்பணிக்கு தயார்.. இந்திய கடற்படை அறிவிப்பால் பரபரப்பு
பாகிஸ்தானுடன் எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில் இந்தியாவின் 5 போர்க்கப்பல்களின் புகைப்படத்தை வெளியிட்டு தேசப்பணிக்கு தயார் என இந்திய கடற்படை அறிவித்துள்ளது.
இதன்படி ஒற்றுமையில் தான் சக்தி இருக்கிறது.. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், எப்படி வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம் எனும் வார்த்தைகளோடு 5 போர் கப்பல்களின் புகைப்படங்களை இந்திய கடற்படை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்' - பிரதமர் மோடி
பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய மக்கள் சார்பாக போப் பிரான்சிஸ் உடலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் செய்த சேவையை உலகம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.