விஜய் அழைத்து பேசியது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது; உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி
துயர சம்பவம் குறித்து உங்களுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை என்று விஜய் கூறியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.;
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் நேற்று ஆறுதல் கூறினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சென்னையில் இருந்தும் மீண்டும் பஸ்சில் கரூருக்கு திரும்பினர்.
விஜய்யை சந்தித்தது குறித்து உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், “உயிரிழந்த குடும்பத்தினரை தனித்தனியாக விஜய் சந்தித்து பேசினார். ‘கரூரில் நடந்த நிகழ்வு தனக்கு வருத்தம் அளிக்கிறது. உங்கள் அனைவரையும் கரூருக்கு வந்து நேரில் சந்திக்க வேண்டும் என எண்ணி இருந்தேன். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் உங்களை சென்னைக்கு வரவழைக்க வேண்டியதாகி விட்டது. உங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முடியாதது வருத்தமளிக்கிறது’ என விஜய் தெரிவித்தார். சென்னைக்கு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. உணவு, தங்கும் வசதி அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. விஜய் எங்களை அழைத்து பேசியது மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கிறது” என்றார்.
ஏமூர்புதூரை சேர்ந்த சந்திராவின் உறவினர் கூறுகையில், “கரூரில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற சம்பவம் மறக்க முடியாத துயரமான சம்பவம். சம்பவம் நடந்த நாள் முதல் நான் சரியாக தூங்கவில்லை. தொடர்ந்து அந்த சம்பவம் வருத்தமளித்து கொண்டே உள்ளது. மேலும் உங்களை கரூருக்கு வந்து நேரில் சந்திக்க முடியாததை நினைத்து மேலும் வருத்தமளித்தது. இதனால் உங்களை எப்படியாவது சந்தித்து விட வேண்டும் என்பதற்காகத்தான், உங்களை சென்னைக்கு வரவழைத்தேன். துயர சம்பவம் குறித்து உங்களுக்கு ஆறுதல் கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன் என விஜய் கூறினார். விஜய் எங்களை அழைத்து பேசியது ஆறுதலாக உள்ளது” என்றார்.