சீனாவுக்கு உளவு வேலை... இந்திய வம்சாவளி வெளியுறவு கொள்கை நிபுணர் அமெரிக்காவில் கைது
ஆஷ்லேவுக்கு எதிரான இந்த வழக்கில், அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.;
விர்ஜீனியா,
அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின வியன்னா நகரில் வசித்து வருபவர் ஆஷ்லே டெல்லிஸ் (வயது 64). இந்தியா வம்சாவளியை சேர்ந்த இவர், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோத வகையில் பதுக்கி வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அவருடைய வீட்டில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட முக்கிய ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இது அமெரிக்க குடிமக்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதுதவிர சமீப ஆண்டுகளில் பல முறை சீன அரசு அதிகாரிகளையும் அவர் சந்தித்து பேசியிருக்கிறார். அதற்கான சான்றுகளும் உள்ளன. இதனை தொடர்ந்து ஆஷ்லேவுக்கு எதிராக வழக்கு ஒன்று கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் பலருடைய அரசு நிர்வாகத்திலும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான உறவுகள் தொடர்பான விசயங்களில் பணியாற்றி வந்தவரான ஆஷ்லே, தெற்காசிய கொள்கைக்கான நீண்டகால ஆலோசகராகவும் இருந்துள்ளார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் அரசில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றி இருக்கிறார்.
இந்தியா மற்றும் தெற்காசியா தொடர்பாக, அமெரிக்காவின் இரு பெரும் கட்சிகளான குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகளின் அரசில் பணியாற்றி இருக்கிறார். சர்வதேச அமைதிக்கான தொண்டு நிறுவனத்தின் மூத்த உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
உளவு ஆவணங்களை தவறாக கையாள்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பது என்று டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்து உள்ள சூழலில், ஆஷ்லேவின் கைது நடவடிக்கை அமைந்துள்ளது.
இந்தியாவின் மும்பை நகரில் பிறந்து அமெரிக்காவின் சிகாகோ நகர பல்கலைக்கழகத்தில் பயின்றவரான ஆஷ்லேவுக்கு எதிரான இந்த வழக்கில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். 2.5 லட்சம் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்படும்.